“ஆங்கிலக் கால்வாய் அகதிகள் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிக்க பிரீதி பட்டேல் வரவேண்டியதில்லை,” பிரான்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் காற்றிழந்த படகு மூழ்கியதில் அகதிகள் இறந்துபோனதிலிருந்து ஆங்கிலக் கால்வாய் அகதிகளை நிறுத்துவது பற்றி பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே நீண்ட காலமாகவே இருந்துவரும் மனஸ்தாபங்கள் மேலும் வெடித்திருக்கின்றன. அந்த ஆபத்தான பாதையில் மனிதர்கள் பயணிப்பதை நிறுத்தவேண்டுமென்று இரு தரப்பாரும் குறிப்பிட்டாலும் ஒருவரையொருவை எப்படி அணுகுவது என்பதிலிருக்கும் இடைவெளி குறைந்ததாகத் தெரியவில்லை.

இரு தரப்பாருக்கும் இடையிலான தொடர்பில் புதிதாக ஏற்பட்டிருக்கும் வாய்ச்சண்டைக்கு பிரதமர் ஜோன்சனின் கடிதமொன்று காரணமாகியிருக்கிறது. பிரான்ஸிலிருந்து ஐக்கிய ராச்சியத்துக்கு வரும் அகதிகளை பிரான்ஸ் திரும்பவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஜோன்சன் குறிப்பிட்டதை, “கடிதம் எழுதப்பட்டிருக்கும் முறையும் அதிலிருக்கும் விடயங்களும் அர்த்தமற்றவை,” என்று பிரெஞ்சு ஜனாதிபதியின் உதவியாளர் கபிரியேல் அட்டால் சாடியிருக்கிறார். உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் இன்னும் ஒரு படி மேலே போய், “நடைபெறவிருக்கும் அகதிகள் சம்பந்தமான ஐரோப்பிய உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேலுக்கு இடமில்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளே ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்படவிருக்கும் அகதிகள் கையாளல் பற்றிய மாநாட்டில் பங்குபற்றவிருக்கிறார்கள். 

இரண்டு பகுதியாரும் தொடர்ந்தும் வெவ்வேறு மட்டத்தில் ஒருவரையொருவர் தொடர்ந்தும் சாடிப் பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பிரச்சினைகளின் பின்னர் பிரெஞ்ச், பிரிட்டன் உள்துறை அமைச்சர்கள் ஒருவரொருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதுபற்றித் தொடர்ந்து சிந்திப்பதாகவும் உறுதிகூறியிருப்பதாகத் தெரிகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்