தேங்கும் மழைநீரால் கண்ணீர் விட்டு ஏது பயன்

நீருக்கு அரணாய் நிலமிருந்தால் நிச்சயம் ஊர்கள் சிதையாது

யாரு மிதனை உணருங்கால்எவருக்கும் துன்பம் கிடையாது

ஆறுக்கு வழியிலை தூர்வாரா

அங்கங்கும் அடைப்பு நேர்மாறா

பேருக்கு குளமும் ஏரியுமே

பெய்கிற மழையெங்கு சீருறுமோ!

குளத்தை துற்றார் குடியேற

குடிசையை நட்டார் அதிலூற

வளத்தை யளிக்கும் ஏரிக்குள்

வைத்தார் மாளிகை அடுக்கடுக்காய்

பலத்தை யிழந்த நீர்நிலைகள்

பாழாய்ப் போச்சு பலராலே

களத்தில் தேங்கும் மழைநீரால்

கண்ணீர் விட்டு பயனில்லை!

தானே தலையில் மண்ணிட்டு

தவித்தினி பயனெது அறிவாரா

வீணே வானை ஏசுவதால்

வீதியில் வெள்ளம் வடிந்திடுமா

நானோ நீயோ சிந்தித்து

நாளை யிதுபோல் நடவாமல்

கால்வாய் ஏரி குளந்தன்னை

கட்டுக் கோப்பாய் சரிசெய்வோம்!

எழுதுவது ; பொன்மணிதாசன்