ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவன மையங்களை மறித்து எதிர்ப்பைக் காட்டும் சூழல் பேணும் ஆர்வலர்கள்.

சர்வதேச ரீதியில் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் நாளான கறுப்பு வெள்ளி தினத்தை எதிர்த்து EXTINCTION Rebellion அமைப்பினர் ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவனத்தின் மையங்கள் முன்னால் மறிப்பு நடத்துகிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

“கறுப்பு வெள்ளி மலிவு விற்பனை, மனிதர்களையும், பூமியின் வளங்களையும் சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறது,” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவே அமெஸான் நிறுவனம் விநியோகம் செய்யும் முகமாகத் தனது பொருட்களைச் சேமிக்கும் மையங்களில் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக அந்தச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். 

கெண்ட், எஸ்ஸெக்ஸ், நியூகாஸில், பிரிஸ்டல், டார்லிங்டன் மற்றும் சில இடங்களிலிருக்கும் அமெஸான் மையங்களுக்கு முன்னாலிருக்கும் வீதிகளை அந்த ஆர்வலர்கள் மறித்துப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து வருகிறார்கள். ஐக்கிய ராச்சியத்தின் 13 மையங்களைத் தவிர ஐரோப்பாவின் மற்றைய சில மையங்களிலும் தாம் மறியல் நடத்துவதாக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள். போக்குவரத்துக்குச் செய்யப்படும் தடைகளை முடிந்தவரை தாம் களைந்து வருவதாக அப்பிராந்தியத்துப் பொலீசார் தெரிவிக்கிறார்கள். 

“காலையில் எங்களுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதன் மூலம் இயற்கை ஆர்வலர்கள் எங்கள் ஆதரவைப் பெறமுடியாது,” என்று போக்குவரத்துத் தடைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் எரிச்சலடைகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்