சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினர் பிலிப்பைன்ஸுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்!
நாட்டின் போதை மருந்து விற்பனையாளர்களை ஒழித்துக்கட்டப் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுவார்ட்டே மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூடியச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், தாம் அதுபற்றிய விசாரணைகளுக்காகப் பிலிப்பைன்ஸுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தது. புதனன்று வெளியிடப்பட்ட அந்த முடிவை எதிர்கொண்ட ஜனாதிபதியின் காரியாலயம், “சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற ஆராய்வாளர்கள் பிலிப்பைன்ஸுக்கு வர அனுமதி மறுக்கப்படும்,” என்று தெரிவித்திருக்கிறது.
தனது தேர்தல் வாக்குறுதியாக, போதை மருந்துகளின் பாவனையை ஒழித்துக்கட்டுவதாகச் சொன்ன டுவார்ட்டே பதவிக்கு வந்ததும் அதற்காக மிகக் கடுமையான வழிகளை நடைமுறைப்படுத்தினார். போதை மருந்து விற்பவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லும்படி பொலிசாருக்குப் பல தடவைகள் டுவார்ட்டே அறைகூவினார். தானே அப்படியானவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் டுவார்ட்டே பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்காமல் இஷ்டப்படி கொன்றொழிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. தற்போது ஓய்வுபெற்றுவிட்ட அந்த நீதிமன்றத்தின் முன்னால் தலைமை வழக்கறிஞர் பத்தௌ பென்சூத்தா பிலிப்பைன்ஸில் நடந்த போதைப்பொருட்கள் ஒழிப்புப் போரைப் பற்றி விசாரிக்கும் முயற்சியை ஆரம்பித்திருந்தார்.
பிலிப்பைன்ஸ் அரசு அப்படிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6,100 என்கிறது. ஐ.நா-வின் கணிப்புப்படி அது சுமார் 8,600 ஆகும். மனித உரிமைக் குழுக்களோ அப்படியாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000 வரை என்கிறது. பிலிப்பைன்ஸ் பொலீஸ், பாதுகாப்புப் படை உட்பட டுவார்ட்டேயின் நெருங்கிய அதிகாரிகளும் தம்மிஷ்டப்படி வேட்டையாடிப் பலரைக் கொன்றொழித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
“நாங்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்தும், தனி மனித உரிமைகளை மதிக்கும் ரோம் ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டோம். அதனால், அந்த நீதிமன்றப் பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்கும் அவசியம் எமக்கு இல்லை,” பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி காரியாலயச் சட்டத்துறைத் தலைவர் சல்வடோர் பனேலோ தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்