ரஷ்யாவின் பெர்ம் நகரப் பல்கலைகழகத்தில் 18 வயது இளைஞனொருவன் நுழைந்து சுட்டுத் தள்ளினான்.
மொஸ்கோவுக்குக் கிழக்கிலுள்ள பெர்ம் என்ற நகரிலிருக்கும் பல்கலைக்கழகமொன்றினுள் ஆயுதபாணியாக நுழைந்த 18 வயது இளைஞன் கண்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டான். ரஷ்யாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் விபரங்களின்படி இதுவரை எட்டுப் பேர் இறந்திருப்பதாகவும் 20 க்கும் அதிகமானோர் காயப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.
கறுப்பு இராணுவ உடையுடனும், இரண்டாம் உலக நாஸிப் படைகளின் தலைக்கவசத்துடனும் நுழைந்த 18 வயது இளைஞன் வேட்டைத் துப்பாக்கியொன்றால் சுட்டிருக்கிறான். அந்தப் பல்கலைக்கழக மாணவனான அவன் உள்ளே நுழைவது, நடந்து சென்று துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவது ஆகியவைகளை கட்டடங்களினுள்ளிருந்த பலர் படமாக்கிச் சமூகவலைத்தளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கியுடன் வருபவனிடமிருந்து தப்புவதற்காகப் பல மாணவர்கள் சாளரங்களின் மூலம் பாய்ந்தும் சிலர் அவன் உள்ளே வராமல் தளபாடங்களால் தடைகள் போடுவதும் படங்களில் தெரிகிறது. அவனைப் பொலீசார் கைதுசெய்துவிட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட ரகத் துப்பாக்கியால் சூடுபட்டவர்கள் உயிர் தப்புவது அரிதென்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகும் என்று தெரியவருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களை ஜனாதிபதி புத்தின் தெரிவித்திருக்கிறார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவன் அந்தப் பல்கலைக்கழகத்தில் சட்டம், தடவியல் மருந்துத்துறை ஆகியவற்றைக் கற்பவனாகும். அவன் சமூகவலைத்தளங்களில் “நான் செய்யப்போவது தீவிரவாதத் தாக்குதல் அல்ல. எனது வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். அகப்படும் பலரை அழிக்கவே இந்தக் காரியத்தை நான் செய்யப்போகிறேன்,” என்று தனது நடவடிக்கைக்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறான். ரஷ்ய ஊடக விபரங்கள் நடந்ததைத் தீவிரவாதத் தாக்குதல் என்றே விபரித்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்