அப்பிள் நிறுவனத்துடன் பெரும் மோதலொன்றுக்குத் தயாராகிறது ஐரோப்பிய ஒன்றியம்.
கைப்பேசிக் கலங்களுக்குச் சக்தியேற்றும் உதிரிப்பாகம் சகலவிதமான கைப்பேசிகளும் பாவிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வியாழனன்று அறிவித்திருக்கிறது. அதன் மூலம் பெருமளவு எலக்ரோனிக் குப்பைகளைக் குறைக்கலாம் என்பது காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் வாடிக்கையாளர்களின் இழுப்பறைகளுக்குள் கலங்களுக்குச் சக்தியேற்றும் பாவிக்க முடியாத உதிரிப்பாகங்கள் நிறைந்துபோயிருக்கின்றன. அப்படியான நிலைமையைத் தவிர்க்கும்படி நாம் நீண்டகாலமாகக் கைப்பேசித் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டும் பயனில்லாமல் போய்விட்டது. எனவே கட்டுப்பாடுகள், சட்டங்கள் மூலம் அதைத் தீர்த்து அனாவசியமான குப்பைகளைத் தவிர்ப்பதே எங்கள் நோக்கம்,” என்று ஐ.ஒன்றியத்தின் அறிக்கை விளக்கமளிக்கிறது.
USB-C என்ற உதிரிப்பாகத்தையே ஐரோப்பிய ஒன்றியம் தனது பிராந்தியத்துக்குள் பாவிக்கும் உதிரிப்பாகமாக அறிவித்திருக்கிறது. 2009 லிருந்தே நிறுவனங்கள் தாமாகவே ஒன்றியத்துடன் கூட்டுறவில் தமது தயாரிப்புக்களைச் செய்யவேண்டுமென்று விண்ணப்பம் விடப்பட்டு வருகிறது.
இவ்விடயத்தில் அப்பிள் நிறுவனம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. எல்லாக் கைப்பேசிகளுக்கும் கலங்களைச் சக்தியூட்டுவதற்காக ஒரே வித உதிரிப்பாகங்களைப் பாவிக்கும்படி கட்டாயப்படுத்துவது நிறுவனங்களின் கண்டுபிடிப்புக்களுக்கு இடையூறு செய்வதாகும் என்கிறது அப்பிள். அத்துடன் அப்படியாக உதிரிப்பாகங்களின் அமைப்பைக் கட்டுப்படுத்துவது தமது தயாரிப்புச் சுதந்திரத்துக்குள் குறுக்கிடுவதுமாகும் என்கிறது அப்பிள் நிறுவனம்.
காலநிலை, சூழல் ஆகியவற்றுக்குச் சாதகமாக இயற்கை வளங்களைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளின்படி அனாவசியமாக விரயங்களை ஏற்படுத்துவதைத் தடுப்பதே ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கும் இத்தீர்மானத்தின் பின்னாலிருக்கும் காரணமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்