பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளர்களாகச் சீனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்திய ஜப்பானைப் போலவே சீனாவும் வரவிருக்கும் குளிர்காலப் போட்டிகளைக் கொரோனாப் பரவல் இல்லாமல் நடத்தி முடிக்கும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே போட்டிகள் ஆரம்பிக்க நான்கு மாதங்களின் முன்னரே கட்டுப்பாடுகள் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் பந்தயங்களின்போது பார்வையாளர்கள் எவருமே அனுமதிக்கப்படவில்லை. சீனாவோ சீனர்கள் மட்டும் பார்வையாளர்களாக வரலாம் என்று குறிப்பிட்டிருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும்.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற 100 நாடுகளிலிருந்து சுமார் 3,000 பேர் வரவிருக்கிறார்கள். வருபவர்கள் கொவிட் 19 தடுப்பு மருந்து எடுத்திருக்கவேண்டும். அல்லாதவர்கள், கட்டாயமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மருத்துவ காரணங்களுக்காகத் தடுப்பு மருந்தை எடுக்க முடியாதவர்கள் பற்றிய முடிவுகள் அவரவருக்கேற்றபடி எடுக்கப்படும்.
போட்டிகளில் பங்குபற்ற வருபவர்கள் நாட்டுக்குள் நுழைந்தவுடன் விளையாட்டு வீரர்கள், போட்டிகளுக்காகப் பணியாற்றுபவர்கள் ஆகியோரைக் கொண்ட குமிழி அமைப்புக்குள் சேர்க்கப்பட்டு விளையாட்டுகளில் பங்குபற்றுவார்கள். பெப்ரவரி 04 – 20 திகதி வரை போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
சீனாவின் அரசால் எடுக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பற்றிய கொரோனாக் கட்டுப்பாடுகள் சர்வதேச ஒலிம்பிக்ஸ் அமைப்பின் நிர்வாகிகளால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்