ஆரம்பகாலக் கொரோனாக் கிருமிகளுக்கெதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கொவிட் 19 க்கு எதிராகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.
கொவிட் 19 கொடும் வியாதியை எதிர்கொள்வதற்கென்று இதுவரை எவ்வித மருந்துகளும் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படாமலிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஐக்கிய ராச்சியத்தில் molnupiravir என்ற மருந்து வீட்டிலிருந்தே ஒரு நோயாளியால் பாவிக்கப்படலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
Merck Sharp & Dohme என்ற நிறுவனத்தால் ஆரம்பகாலக் கொரோனாக் கிருமிகளின் தொற்றுக்கள் தொடங்கும்போதே ஆராயப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை இதுவாகும். மோல்னுபிரவீர் என்ற இந்த மருந்து பல நாடுகளிலும் கொவிட் 19 நோயாளிகளுக்குப் பாவிக்கப்பட்டு ஆராய்வில் ஈடுபடுத்தப்பட்டது.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் நோயின் ஆரம்பக்கட்டத்தில் [முதல் ஐந்து நாட்களுக்குள்] மோல்னுபிரவீரை வீட்டிலிருந்தபடியே பாவிப்பதற்கு மருத்துவர்கள் கொடுக்கலாம். இம்மருந்து அக்கிருமியின் பாதிப்பு ஒருவரைக் கடும் நோய்க்கு ஆளாகாமலிருக்க அல்லது இறப்புக்குள்ளாகமலிருக்க 50 விகிதம் பாதுகாப்பு அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன.
உலகின் முதலாவது நாடாக ஐக்கிய ராச்சியம் இம்மருந்தை கொவிட் 19 சிகிச்சைக்குப் பாவிக்க அனுமதித்திருப்பினும், அமெரிக்கா உட்படப் பல ஐரோப்பிய நாடுகளின் மத்திய மருத்துவ அமைப்புக்களும் விரைவில் அம்முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்