உன்னை நிரூபணம் செய்…
தோழனே…
ஒரு துளியில் உருவெடுத்து
பெருவெளியை
சொந்தம் கொண்டவனே…
இன்னும்… இன்னும்…
உன்னை
விரிவு செய்…
அகண்டமாக்கு!
அவதார புருஷர்கள் கூட
அற்புதங்களை
நிகழ்த்திதான்
அடையாளம் பெற்றுள்ளனர்…
உன்னை நீ
வெளிப்படுத்தாமல்
உன்னால் என்றுமே வெளிப்பட முடியாது!
சிறகு வளர்ந்த
எந்த பறவையும்
சுருண்டு கிடப்பதில்லை…
நடக்க முடிந்த
எந்த மனிதனும்
முடமாய் வாழ்வதில்லை!
இங்கே
எல்லோருக்குள்ளும்
ஏதோவொரு பேராற்றல்
ஒளிந்துகொண்டுதான் உள்ளது…
தன்னை அறியும்
ஒவ்வொருவனும்
தலை நிமிர்கிறான்!
அடுத்தவரை எண்ணி
புழுக்கம் கொள்பவன்
அழிந்து போகிறான்!
நீ யாராக
இருக்க வேண்டும் என்பதை
நீயே முடிவு செய்…
இராவணனை வெல்ல
இராமனுக்கும் பாதை தேவைபட்டது…
உன்னுடைய இலக்கை எட்ட
முதலில்
உனக்குரிய பாதையை நீயே உருவாக்கு!
எப்போதும்
விதைத்துக்கொண்டே இரு…
விளைந்து கொண்டே இருப்பாய்…
முயற்சித்துக்கொண்டே இரு
முன்னேறிக் கொண்டே இருப்பாய்!
உனக்குள்
மூச்சிருக்கும்வரை
உன் முயற்சியை யாரும்
தடுத்துவிட முடியாது…
காட்டாற்று வெள்ளம்
தன்முன்தோன்றும்
தடைகளையெல்லாம்
தானே உடைத்தெறிந்து
சீறிப்பாய்வதுபோல்
உனக்கு முன்பாக உள்ள
தடைகளையெல்லாம்
நீயே உடைத்தெறி!
உனக்குள் இருக்கும் பேராற்றல்
உன்னை எழ வைக்கும்…
நடக்க வைக்கும்…
முன்னேற வைக்கும்!
அடையாளமற்ற அர்ப்பங்கள்
உன்னைப் பரிகசிக்கலாம்…
அதைத்தவிர அவர்களால்
வேறொன்றையும் செய்துவிட முடியாது!
வாழ்வின் மணிகளை
நிமிடங்களை
நொடிகளை யோசி…
அடுத்தவனுக்கு பதில்சொல்லி
உன்னுடைய நேரத்தை
சுருக்கிக்கொள்ளாதே!
நீ உயர உயர
பூமியின் பரப்பு சுருங்கும்…
எல்லைகள் எல்லாம் உடைந்துபோகும்..
பீனிக்ஸின் இலக்கு
சூரியனை அடைவது மட்டுமே…
உன்னுடைய இலக்கும்
உச்சத்தை நோக்கியதாகவே இருக்கட்டும்!
இடையில்
எதற்காகவும்
உன் கவனத்தை சிதறவிடாதே…
யாருக்காகவும்
உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே!
நீ… நீயாக இரு!
நீ… நீ மட்டுமாகவே இரு!
நீ… வரலாறு படிக்க வந்தவன் அல்ல… படைக்க வந்தவன்
என்பதை நிரூபணம் செய்!
கவிநடையில் எழுதுவது பாரதிசுகுமாரன்