நோர்டிக் நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் அதிகமாக இருப்பது நோர்வேயில்.
நோர்டிக் நாடுகளான சுவீடன், நோர்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளெல்லாவற்றிலும் ஒமெக்ரோன் திரிபு காணப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுவீடன் தவிர மற்றைய நோர்டிக் நாடுகளிலெல்லாம் கொவிட் 19 பரவல் திடீரென்று அதிகரித்திருக்கிறது. இந்த நாடுகளிலெல்லாம் ஏற்கனவே சுமார் 83 விகிதமானோர் தடுப்பூசிகளிரண்டையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது தடுப்பூசி போடுதல் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
பனிக்காலம், நத்தார்-புதுவருட விடுமுறைகாலப் போக்குவரத்து அதிகரிப்பு எதிர்பார்ப்பு ஆகியவைகளால் வரவிருக்கும் ஜனவரி வரை கொவிட் 19 பரவல் மேலும் அதிகரிக்கும் என்றே இந்த நாடுகளின் தொற்றுநோய்ப்பரவல் தடுப்பு திணைக்களங்கள் எச்சரிப்பு விடுத்திருக்கின்றன. அத்துடன் சுவீடன் தவிர்ந்த மற்றைய நோர்டிக் நாடுகளின் சமூகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முகக்கவசமணிதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சுவீடனில் சில பிராந்திய மருத்துவமனைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் மட்டும் முகக்கவசமணிவது நல்லதென்று அறிவுறுத்தப்படுகிறது.
ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இதுவரை அடையாளங்காணப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு விருந்து வைபவத்தில் அது பரவியிருப்பதால் மேலும் பலருக்கும் அது தொற்றியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வேயின் பொது இடங்களிலெல்லாம் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தொற்றுள்ளவர்களுக்குத் தனிமைப்படுத்தலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் சகல எல்லைகளிலும் தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
சுவீடனில் இதுவரை ஐந்து பேருக்கு ஒமெக்ரோன் தொற்று இருப்பது காணப்பட்டிருக்கிறது. தடுப்பூசியைப் பெரும்பாலானோரும் போட்டுக்கொண்டிருப்பதால் நாட்டில் பரவல், இறப்புக்கள் மிகவும் குறைவாக இருப்பதாகத் தொற்றுநோய்த் தடுப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. நாட்டின் தெற்கில் டென்மார்க்கை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் மட்டும் சமீப வாரத்தில் தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன.
வரவிருக்கும் வாரங்களில் கோடை காலத்துக்கு முன்னர் இருந்தது போன்ற அறிவுறுத்தல்கள் கொண்டுவரப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 100 பேருக்கு அதிகமானவர்கள் பங்கெடுக்கும் மூடிய அரங்குகளில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தடுப்பூசிச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உடனடியாக அரசின் கொரோனாத்தொற்றுப் பரிசீலனை மையங்களுக்குச் சென்று தங்களைப் பரிசீலிக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பின்லாந்துக்கு சுவீடனிலிருந்து பயணித்த ஒருவர் ஒமெக்ரோன் தொற்றுடன் வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரங்களில் அங்கு பொதுவாகவே தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனை, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் முகக்கவசமணிதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லைகளிலும் பரிசீலனைகள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த வாரங்களில் கொவிட் 19 வேகமாகப் பரவிவரும் நாடுகளில் மேலுமொன்று டென்மார்க் ஆகும். கொரோனாத்தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து மிக அதிகமான தொற்றுக்கள் டிசம்பர் முதலாம் திகதி அங்கே காணப்பட்டன. பொது இடங்கள் பெரும்பாலானவற்றிலும் போக்குவரத்திலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பல சேவைத்தலங்களில் கொவிட் தடுப்பூசிகள் போட்ட அடையாள அட்டையைக் காட்டியே சேவை பெறலாம்.
எல்லைகளில் கட்டுப்பாடுகள், பரீட்சைகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. டொஹா, டுபாய் போன்ற விமானப்பயணச் சந்திகளிலிருந்து வருபவர்கள் நாட்டுக்குள் நுழையமுன்னர் கட்டாயமாகத் தங்களைப் பரிசீலித்துக்கொள்ளவேண்டும். தடுப்பூசி போடாதவர்களை வேகமாக அதைப் பெற்றுக்கொள்ளும்படி நாட்டின் பிரதமர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
ஐஸ்லாந்திலும் ஒமெக்ரோன் திரிபுத் தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த நபர் வெளிநாடெதுக்கும் போகாதவர் என்பதால் அது ஏற்கனவே நாட்டுக்குள் பரவியிருப்பதாகக் கருதப்படுகிறது. பொது நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்குபற்றலாம். கொவிட் தடுப்பூசி பெற்ற சான்றிதழ்களுடன் 500 பேர் பங்குபற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒமெக்ரோன் தொற்றுள்ளவர்கள் அதிக நோயுள்ளவர்களாகக் காணப்படவில்லையென்பதே இந்த நாடுகளின் கவனிப்பிலும் தெரியவருகிறது. மற்றப்படி நாட்டில் தொற்றுக்குள்ளாகிக் கடும் நோயுள்ளவர்கள், அவசரகாலச் சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்களாகவே இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்