மாவீரனாய் மாற்றம்கொள்…
புதைந்த விதையும்
முளைக்கிறது…
ஒடிந்த மரமும் துளிர்க்கிறது…
மறைந்துபோன
செங்கதிரும்
கீழ்வானில்
மீண்டெழுகிறது!
உன்
உடலுக்குள்
இன்னும் உயிர்
நிரம்பியே இருக்கிறது…
முந்தைய நிகழ்வுகள்
உனக்கு முடிவல்ல…
அதுதான் உன் தொடக்கம்!
நீ முயற்சித்தால்
வானத்தை எட்டலாம்…
பூமியை
உன் கால்களின் கீழே
நிறுத்தலாம்…
பகையை
வென்றழிக்கலாம்!
இன்னும்
அடிமையென்ற
விலங்குகளுக்குள்ளா அடைபட்டு கிடப்பாய்…
திமிறியெழு…
உன்னைப் பூட்டிய விலங்குகள்
சிதறிப்போகும்…
சுதந்திரம் தேடு..
எதிரியின் ஆயுதம்
உன் வசமாகும்…
ஒரு பிரளயத்தை
உருவாக்க சின்னதொரு
தீக்குச்சி போதும்…
எதிரியின்
ஆயுதம்தான்
உன்னை அடிமைப்படுத்துகிறதெனில்
அதனை முதலில்
நிர்மூலம் செய்…
பயமென்ற அச்சத்தை
தூக்கிப்போடு…
எல்லா பலமும்
உனக்குமுண்டு…
நீயும் மாவீரனாய்
மாற்றம்கொள்…
எதிரிகளின் கோட்டைகள் பிளவு கொள்ளும்…
புதைக்கப்பட்டதெல்லாம்
விதைக்கப்பட்டதென
உறுதிபடுத்து…
இரத்தம் தோய்ந்த பூமியில்
யுத்தத்தை தொடங்கு…
மாற்றம் என்பதை
உன்னிடத்திலிருந்தே
உருவாக்கு…
இருட்டை வெளுக்க
சின்ன வெளிச்சம் போதும்…
அதர்மத்தை அழிக்க
ஒரேயொரு குரல்போதும்!
படை வீரனாக
எழுச்சிகொள்…
முன்னேரின் பின்தொடரும் ஏர்களாய் உன்னினம்
உன்னைப்பின் தொடரும்!
நீ சிந்தும்
ஒவ்வொரு துளி இரத்தத்தில் இருந்தும்
ஓருயிர் தோன்றும்…
தோல்வி என்பதும் தோல்வியல்ல…
வீழ்ச்சி என்பதும் வீழ்ச்சியல்ல…
வீறுகொள்..
உன்னால் முடியும்
வெற்றி கொள்ள!
எழுதுவது பாரதிசுகுமாரன்