மாலியில் தமது பொருட்களை விற்கச் சந்தைக்குப் போனவர்களை வழிமறித்துக் கொன்றார்கள் தீவிரவாதிகள்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் சமீப காலத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கையோங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் தமது வீடும் நாடுமிழந்து புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி கொல்லப்பட்டுவரும் சாதாரண மக்களைப் போலவே தமது விளைச்சலை விற்கச் சந்தைக்குப் பேருந்தில் சென்றவர்களை வழிமறித்து கொன்றிருக்கிறார்கள் ஒரு குழுவினர்.

சொங்கோவிலிருந்து பத்துக் கிலோமீற்றர் தூரத்துக்குப் போய்க்கொண்டிருந்த பேருந்தை வழிமறித்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள் தீவிரவாதிகள். 31 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஏழைப் பெண்களென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் கைதா, இஸ்லாமிய காலிபாத் உட்பட்ட அமைப்புக்கள் மாலியில் வேரூன்றியிருக்கின்றன. சர்வதேசப் பாதுகாப்புப் படைகள் அங்கே பாதுகாப்புக்காகச் சென்றிருந்தாலும் பெரும் பயனெதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஐ.நா-வின் 18,000 இராணுவத்தினரும், பிரான்ஸின் 5,000 இராணுவத்தினரும் அங்கே செயற்பட்டு வருகிறார்கள்.

தமது பலத்தை ஸ்தாபிக்க இரண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அங்கே தமக்குள்ளும், மாலி அரசுடனும் போரிட்டு வருகிறார்கள். மாலியின் அரசு இதனால் படு பலவீனமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்ப்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்