இஸ்ராயேலுக்கும், ஜோர்டானுக்குமிடையிலான நீருக்குப் பிரதியாக சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக ஜோர்டானில் எதிர்ப்பு.
டிரம்ப் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இஸ்ராயேல் – எமிரேட்ஸ் நட்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அந்த நாடுகளிரண்டுக்குமிடையே வளர்ந்து வரும் கூட்டுறவுத் திட்டங்களில் ஒன்றாக இஸ்ராயேலும், ஜோர்டானும் நீருக்குப் பிரதியாக சக்தி என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவும், எமிரேட்ஸும் பின்னணியில் நின்று உண்டாக்கியிருக்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து சில நூறு பேர் எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.
புவியின் காலநிலை மாறிவருவதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் தனது பங்காக, 2050 இல் நாடு கரியமிலவாயு வெளியேற்றலை நிறுத்துவதாகத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வழிவகைகளிலொன்றாக இயற்கை வளங்களைப் பாவித்து எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களில் பங்குபற்றுவதற்காகவே இஸ்ராயேல் இவ்வொப்பந்தத்தில் இணைந்திருக்கிறது.
எமிரேட்ஸ் தனது உதவித்திட்டமாக ஜோர்டானில் சூரிய வெளிச்சத்தால் சக்தியைப் பெறும் மையமொன்றை நிறுவ முன்வந்திருக்கிறது. அது 2026 இல் முழுசாக இயங்க ஆரம்பிக்கும். அங்கிருந்து இஸ்ராயேலுக்கு 600 மெகாவாட் எரிசக்தி கொடுக்கப்படும். பதிலாக வரட்சியால் பல வருடங்களாக வாடும் ஜோர்டானுக்கு 200 மில்லியன் கியூபிக் மீற்றர் குடிநீரை இஸ்ராயேல் கொடுக்க வேண்டும் என்பதே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் சாராம்சமாகும்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ராயேல் அநீதி இழைப்பதாகப் ஜோர்டான் உட்பட்ட நாடுகளில் பெரும் மனக்கசப்பு உண்டு. 1994 இல் இஸ்ராயேல் – ஜோர்டான் நட்பு ஒப்பந்தம் நடந்தபின் இரண்டு நாடுகளுமிணைந்து செய்துகொள்ளும் பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.
ஜோர்டானிய அரசு தனது வரட்சிப் பிரச்சினைக்கு நாட்டுக்குள்ளேயே ஒரு தீர்வு காணாமல் விடுவதுடன், இஸ்ராயேலிடம் நீருக்காக மேலும் தங்கியிருக்கவேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியான தங்கியிருக்கும் நிலைமையில் ஜோர்டான் துணிவுடன் பாலஸ்தீனர்களின் நல்வாழ்வுக்காகக் குரலெழுப்ப முடியாமல் போகுமென்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்