ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் கையளிக்க ஐக்கிய ராச்சிய நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது.
அமெரிக்காவில் நீதிமன்ற விசாரணைகளுக்காக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை ஐக்கிய ராச்சியம் கையளிக்கலாம் என்று லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவ்வருட ஆரம்பத்தில் கீழ்மட்ட நீதிமன்றமொன்று அவரை அமெரிக்காவிடம் கையளிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது.
அமெரிக்காவிடம் விசாரணைக்காக ஜூலியன் அஸாஞ்சை அனுப்புவது அவருக்கு மனோதத்துவ ரீதியில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு ஜனவரியில் வந்திருந்த நீதிமன்றத் தீர்ப்பை மேன்முறையீடு செய்ததற்கே இத்தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்து இருப்பதாக முன்னர் வந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னர் வந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவின் அரச வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்திருந்தபோது அவருடைய மனோ நிலைக்குப் பாதிப்பு ஏற்படாதபடி அவரைக் கையாள்வதாக உறுதிகூறி, அவைகள் பற்றிய விளக்கங்களையும் அளித்திருந்தார்கள். அமெரிக்காவில் அவர் சட்டரீதியாகத் தண்டிக்கப்படுவாராக இருந்தால் அந்தச் சிறைத்தண்டனையை அவர் தனது சொந்த நாடான ஆஸ்ரேலியாவிலேயே கழிக்கலாம் என்றும் உறுதிகூறப்பட்டிருந்தது.
விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பல படங்கள், விபரங்கள் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் என்றும் அவைகளை வெளியிட்டதன் மூலம் அசாஞ்ச் அமெரிக்காவின் பாதுகாப்புக்குப் பெரும் பாதகத்தை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். அவர் மீது 18 பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா சுமத்தியிருக்கிறது. உளவு பார்த்தல், கோப்புக்களைக் களவாக எடுத்தமை போன்றவை அவற்றில் சிலவாகும். அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர் தண்டிக்கப்படுவாராயின் அவர் சுமார் 175 வருடச் சிறைத்தண்டனை பெறும் சாத்தியமிருக்கிறது.
சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் பலவும் அசாஞ்ச் வெளிப்படுத்திய விடயங்கள் பல அமெரிக்க இராணுவத்தினரின் கொடுமைகளையும், மனித உரிமைகளுக்கெதிரான குற்றங்களையும் வெளிப்படுத்தியதால் அவர் செய்தது மக்களுக்கு ஒரு சேவையாகும் என்று சுட்டிக்காட்டி வருகின்றன.
வெளியாகியிருக்கும் தீர்ப்பு, கடைசியானதல்ல. ஐக்கிய ராச்சியத்தின் நீதித்துறைக்கூடாக அவரை அமெரிக்காவுக்குக் கையளிக்கலாமா என்ற கேள்விக்கான முடிவு வர மேலும் சில கட்டங்களைத் தாண்டவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அசாஞ்சின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்யவிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்