மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றிவந்த பாரவண்டி விபத்தில் 53 பேர் மரணம்.

சியாப்பாஸ் நகரில் மத்திய அமெரிக்க நாட்டு அகதிகளை ஏற்றிவந்த நீண்ட பாரவண்டியொன்று சுவரொன்றுடன் மோதிப் புரண்டது. அமெரிக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர்களில் 53 பேர் இறந்து சுமார் 60 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்களே அந்தப் பாரவண்டியில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் என்று தெரியவருகிறது. 10 சிறுபிள்ளைகளையும் கொண்டிருந்த அந்தப் பாரவண்டியில் அளவுக்கதிகமான பாரம் இருந்ததால் வாகன ஓட்டி தனது கட்டுப்பாட்டை இழந்ததாலேயே அந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் 21 அருகிலிருக்கும் மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மோசமாக அடிபட்டிருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்ஸிகோ சமீப வருடங்களில் மனிதக் கடத்தக்காரர்களின் முக்கிய தலமாக மாறியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த நாட்டு அரசு தாம் அக்கடத்தல்காரரைக் கண்டுபிடித்து அப்போக்குவரத்தை நிறுத்துவதாக உறுதியளித்தாலும் எதுவுமே நடக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒக்டோபர் மாதத்தில் 6 பாரவண்டிகளில் கிழங்குகள் போல அடுக்கப்பட்டு அகதிகள் 650 பேர் கடத்தப்படுவதை பொலீசார் நிறுத்தினார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்