திட்டமிட்டு மாயா பழங்குடியினர் மீது காட்டப்பட்ட அரசியல் குரூரங்களுக்காகத் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டார் மெக்சிகோ ஜனாதிபதி.

“இனச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி ; மன்னிப்புக் கோரும் விழா” என்ற நிகழ்ச்சியொன்றை நடாத்தி தனது நாட்டு மாயாப் பழங்குடி மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி மானுவல் லொபேஸ் ஒப்ரடோர். இந்த விழா மாயாப் பழங்குடிகளின் தலை நகரம் எனப்படும் டிஹொஸுகோவில் நடாத்தப்பட்டது.

ஸ்பானிய ஆக்கிரம்பிப்பாளர்களாலும், மெக்சிகோவின் ஆளும் தரப்பினராலும் நீண்ட காலமாகத் திட்டமிட்டுப் பழங்குடியினர் மீது நடாத்தப்பட்ட அக்கிரமங்களுக்காக ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். யுக்கட்டான் குடானாட்டில் வாழ்ந்த மாயா பழங்குடியினர் தமக்கெதிராக நடாத்தப்பட்ட அநீதிகளை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தபோது டிஹொஸுகோ நகரில் தான் அவர்களுடைய பிரதான தளம் இருந்தது. அங்கிருந்தே அவர்களுடைய எதிர்த்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டன.

“நூற்றாண்டுகளாக நாம் மாயாப் பழங்குடியினரைக் கீழ்ப்படுத்தி அவமதித்து நடந்தோம். விபரிக்க முடியாத அக்கிரமங்களை அவர்கள் சுமந்தார்கள். அவைகளையெல்லாம் நாம் நீண்டகாலமாக மறுத்து வந்தோம். இன்று, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பது மூலம் அவர்களுடைய வேதனைகளில் பங்குகொள்கிறோம்,” என்று மெக்சிகோவின் உள்நாட்டு அமைச்சர் ஒல்கா சான்சேஸ் கொர்டேரோ தெரிவித்தார்.  

யுகட்டான் குடாவாசிகளான மாயாப் பழங்குடியினர் 1847 இல் ஐரோப்பிய ஆளும்வர்க்கத்தின் மீது தமது போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 1901 ம் ஆண்டுவரை தொடர்ந்த அந்தப் போராட்டம் அவ்வருடம் அப்பிராந்தியத்தை இராணுவம் ஆக்கிரமித்ததுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

மாயாப் பழங்குடியினரின் பிரசித்திபெற்ற சரித்திரமும், அதன் பெருமைகளும் உலகறிந்தவை. அவைகளின் அடையாளங்களையும், காரணகளையும் மெக்சிகோ ஆளும்வர்க்கம் பாவித்து அதன் மூலம் சுற்றுலாப்பயணிகளிடம் பெரும் இலாபம் சம்பாதித்து வந்தாலும் அவற்றை மாயாப் பழங்குடியினர் பெறமுடிந்ததில்லை. அவர்கள் சமூக வளர்ச்சியிலிருந்து திட்டமிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தனர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *