கஞ்சா விவசாயம், வியாபாரம், தனியார் பாவிப்பு ஆகியவைகளை அனுமதித்துத் தீர்ப்பளித்தது மெக்ஸிகோ உச்ச நீதிமன்றம்.

நாட்டில் நிலவும் கஞ்சா பாவிப்புத் தடை மெக்ஸிகோவின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நாட்டின் சட்டமன்றத்தில் அதுபற்றிக் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றுக்கான முடிவை எடுக்கவே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது.

எனவே, கஞ்சாவை விளைவித்தல், வியாபாரம் செய்தல், தனிப்பட்ட தேவைக்காகப் பாவித்தல் ஆகியவற்றை அனுமதிக்கவிருக்கிறது மெக்ஸிகோ. சட்டத்தை அதற்கேற்றபடி எழுதவேண்டுமென்று நாட்டின் பாராளுமன்றத்துக்கு ஏப்ரம் மாதம் வரை கெடு கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைவர் அர்த்துரோ ஸர்டிவால் “இது ஒரு சரித்திர முக்கியத்துவம் பெற்ற நாள். மக்களின் சுதந்திரத்துக்கான முடிவு,” என்று கூறினார். நீதிமன்றத்தின் பதினோரு நீதிபதிகளில் எட்டுப் பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

கஞ்சாப் பாவிப்புத் தனி மனித சுதந்திரம் என்று போராடும் மெக்ஸிகோவின் உரிமைக் குழுக்கள் உச்ச நீதிமன்றத்தின் முடிவு போதாது என்கின்றன. சாதாரண மனிதர்கள் அதைப் பயமின்றிப் பாவிப்பதற்கான நிலைமையை உண்டாக்கும் சட்டங்களையும் அதற்கேற்றவாறு மாற்றவேண்டுமென்று அவை கோருகின்றன.

மெக்ஸிகோவில் கஞ்சாப் பொருட்களின் விவசாயம், விற்பனை ஆகியவற்றைச் சுற்றியிருக்கும் சட்டங்களால் பல குற்றவியல் குழுக்கள் மிகப் பெரும் இலாபங்களைச் சம்பாதித்து வருகின்றன. போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுடனான அரசின் போரில் 2006 க்குப் பின்னர் 300,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கஞ்சாவைச் சட்டபூர்வமாக்குவதன் மூலம் அவற்றைக் களவாக உற்பத்தி செய்து விற்கும் குழுக்களின் இலாபத்தை இல்லாமல் செய்வதும் அதை சட்டபூர்வமாக்குவதற்கு ஒரு காரணமாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *