ஐரோப்பாவில் கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிக்கும் முதல் நாடு மால்டா.

போதைப் பொருட்களிலொன்றான கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிப்பதன் மூலம் அதைக் களவாக விற்பவர்கள், பாவிப்பவர்களால் ஏற்படும் குற்றங்களின் அளவைக் குறைக்க முடிவு செய்திருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு மால்டா. செவ்வாயன்று கஞ்சாவை அனுமதிக்கும் சட்டம் மால்டாவின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கஞ்சாவைப் பாவித்தல் ஏற்கனவே உலகின் சில நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது. அதை மருந்தாகப் பாவிப்பதற்குப் பல நாடுகள் அனுமதித்திருக்கின்றன. பாவித்தலை அனுமதிப்பதற்கு வரவிருக்கும் ஜேர்மனிய அரசும் திட்டமிட்டிருக்கிறது.

மால்டாவில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டம் தனியார் தமது தேவைக்காக 7 கிராம் கஞ்சா வைத்திருக்கலாம், நான்கு செடிகளை வளர்க்கலாம், அப்பாவனையில் ஈடுபடுகிறவர்கள் 500 பேர் வரை ஒன்றிணைந்து சங்கம் அமைத்துக் கஞ்சா பயிரிடலாம் என்று அனுமதித்திருக்கிறது. 

ஐரோப்பாவில் சில நாடுகள் போன்று பொதுவான இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதை மால்டாவின் சட்டம் அனுமதிக்கவில்லை. அதிக அளவில் கஞ்சா வைத்திருப்பவர்கள் மீதான தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. வயதுக்கு வராதவர்கள் அதை வைத்திருந்தால் அவர்களுக்கு ஆரோக்கிய சேவை மூலம் உதவி வழங்கப்படும்.

“சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர் தமது இளவயதினர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவதைக் காணும் நிலைமையைக் குறைக்க நினைக்கிறோம். கடுமையான போதைப்பொருட்களின் பாவனை மீது தொடர்ந்தும் நாம் கடும் நடவடிக்கைகள் எடுப்போம்,” என்று மேற்கண்ட சட்டத்தைக் கொண்டுவரப் பெருமளவில் போராடிய பிரதமர் ரொபர்ட் அபேலா.

மால்டா கொண்டுவந்திருக்கும் மென்மையான கஞ்சாச் சட்டங்களைக் கொண்டுவரவிருக்கும் இன்னுமொரு நாடு லக்ஸம்பெர்க் ஆகும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கையாளப்பட்டுவரும் அவர்களுடைய சட்டம் இன்னும் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்