போலிகளே புகழ்மகுடம் சூடுகின்றார்

கவியெழுதத் தெரியாத கவிகட் கெல்லாம்
—கவியரசு பட்டங்கள் முகநூ லெல்லாம்
நவில்கின்ற எழுத்தசைச்சீர் தெரியா தோர்க்கே
—நற்றமிழின் செம்மலென்னும் பட்ட யங்கள் !
குவித்திடுவர் பாராட்டை மகுடம் சூட்டிக்
—குறில்நெடில்தாம் என்வென்றே அறியா தோர்க்கே
புவிதன்னில் தாய்மொழியை அழிப்ப வர்க்குப்
—புகழாரம் சூட்டலெல்லாம் தமிழ்நாட் டில்தான் !

கல்லூரி வாசலையே மிதிக்கா தோர்கள்
—கட்டுரையோ ஆய்வுரையோ எழுதா தோர்கள்
நல்லபடி பேசுதற்கும் தெரியா தோர்கள்
—நாலடியோ திருக்குறளோ சங்க மென்று
சொல்லுமெந்த நூல்களையும் பார்க்கா தோர்கள்
—சொந்தறிவு இல்லாமல் பணம்கொ டுத்துப்
பல்லிலித்து முனைவரெனப் பட்டம் வாங்கல்
—பாரினிலே இங்கேதான் இழிவெல் லாமே !

குணமில்லாக் கயவரெல்லாம் பண்பா ளர்கள்
—குற்றவாளி எல்லோரும் ஈகி யர்கள்
கணப்பொழுதும் மக்களினைச் சிந்திக் காதோர்
—கணவான்கள் மக்கள்தம் காவ லர்கள் !
பணமிருந்தால் போதும்நல் மேடை போட்டுப்
—பாராட்டிக் கொள்வார்கள் தமக்குத் தாமே
மணமில்லாத் தாள்பூவோ உண்மைப் பூவாய்
—மாறியிங்கு போலிகளே உயரு கின்றார் !

எழுதுவது : பாவலர் கருமலைத்தமிழாழன்