முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி தனது சுவீடிஷ் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஏலம் விடப்படுகின்றன.

அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் பல காரணங்களுக்காகப் பிரபலமானவர்களில் ஒருவர் ஜோன் கென்னடி என்றால் மிகையாகாது. அவரது காதல் லீலைகளும் அதேபோலப் பிரபலமானவை. சுவீடனைச் சேர்ந்த தனது காதலி குனில்லா வொன் போஸ்ட்டுக்கு அவர் எழுதிய கடிதங்களே பொஸ்டனிலிருக்கும் ஏல நிறுவனமொன்றால் ஏலத்துக்கு விடப்படவிருக்கின்றன.

குனில்லாவுக்குக் கென்னடி முதல் முதலாக 1953 இல் காதல் கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் சில வாரங்களில் ஜாக்குலினுடன் திருமணம் செய்யவிருந்த கென்னடி 1953 ம் ஆண்டில் அக்கடிதத்தை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. 1956 வரையில் அவர் குனில்லாவுக்குக் காதல் கடிதங்கள் வரைந்திருக்கிறார். அவை 2011 இல் குனில்லா இறந்தபின் கண்டுபிடிக்கப்பட்டு முதல் தடவையாக 2015 இல் ஏலம் விடப்பட்டிருந்தன.

புதியதாக செனட்டராகியிருந்த ஜோன் கென்னடி 1953 ம் ஆண்டில் பிரான்ஸிலிருக்கும் அண்டிபேஸுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கே அச்சமயத்தில் மொழி கற்பதற்காக குனில்லா போயிருந்தபோதே அவர்களிருவரும் சந்தித்து அவர்களுக்கிடையே காதல் உண்டாகியிருக்கிறது. அவர் எழுதிய கடிதங்களெல்லாம் அமெரிக்கா செனட் சபையின் உத்தியோகபூர்வமான கடித அடையாளமுள்ள காகிதங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

1955 இல் சுவீடனுக்கு விஜயம் செய்தார் ஜோன் கென்னடி. அந்த விஜயத்தின் முன்னர் அவர் குனில்லாவை மீண்டும் சந்திப்பதிலிருக்கும் ஆர்வத்தைப் பற்றி அவர் ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். 1956 இல் எழுதப்பட்டிருக்கும் இன்னொரு கடிதத்தில் குனில்லா விவாகம் செய்துகொள்ளப் போகிறார் என்பதை அறிந்துகொண்டதைப் பற்றி கென்னடி எழுதியிருக்கிறார். 

“நீ திருமணம் செய்யாமலிருந்தால் உன்னை நாம் மீண்டும் வந்து சந்தித்திருப்பேன். கடந்த வருடம் உன்னைச் சந்தித்து உன்னுடன் செலவழித்த நேரம் சந்தோசமானது,” என்று ஜோன் கென்னடி ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். “Love, Jack,” என்று தனது கடிதங்களை கென்னடி கையெழுத்திட்டதைத் தலையங்கமாக வைத்துத் தனக்கும் அவருக்குமிடையேயிருந்த காதலைப் பற்றி குனில்லா ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அவர்களிருவருடைய காதலைப் பற்றிய வேறு புத்தகங்களும் வெளியாகியிருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *