பல வளர்ந்த நாடுகளையும் விடத் தரமான முறையில் தனது மாணவர்களுக்கு டிஜிடல் முறைக் கல்வியைக் கொடுக்கிறது உருகுவே.

எவரும் எதிர்பாராத விதமாக ஒரு வருடத்துக்கு மேல் உலகைத் தன் பிடிக்குள் வைத்திருக்கிறது கொரோனாத் தொற்றுக்கள். அதனால் பாதிக்கப்பட்டவைகளில் முக்கியமானது பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி என்றால் அது மிகையாகாது. வளமான நாடுகள் கூடத் தொடர்ந்தும் தமது பாடசாலைகளில் ஒழுங்கான முறையில் டிஜிடல் முறையில் கல்வியைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. ஆனால், லத்தீன் அமெரிக்காவின் உருகுவே உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு உதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆர்ஜென்ரீனாவுக்கும், பிரேசிலுக்கும் நடுவேயிருக்கும் 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிய நாடு உருகுவே. சர்வதேச ஒப்பீட்டில் ஒரு பணக்கார நாடல்ல, நடுத்தர வர்க்க நாடுகளையும் விட ஒரு படி கீழேயுள்ள நாடு இது. ஆனால், பல வருடங்களாகவே டிஜிடல் கல்வியில் இருக்கும் அனுகூலங்களைக் கவனித்து அவைகளை நாட்டின் மக்கள் எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டுமென்று செயற்படுகிறது உருகுவே.

நாட்டின் 85 % விகிதமான உருகுவே மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே போகிறார்கள். ஒவ்வொரு ஆரம்ப, நடுத்தர வகுப்பு மாணவருக்கும் ஆளுக்கொரு மடிக்கணனி என்ற திட்டத்தை, உலகின் பத்து நாடுகளிலொன்றாக “ Plan Ceibal” என்ற அரச திட்டத்தின் மூலமாக சுமார் பத்து வருடங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. அவர்களுக்குப் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதே போலவே மடிக்கணனிகள் வழங்கப்பட்டன. 

பாடசாலைப் பிள்ளைகளுக்கு டிஜிடன் பாடப்புத்தகங்களும், அதனுடன் இணைந்த பயிற்சிப் புத்தகங்களும், அவைகளுக்கு உதவி தேவையான உதவும் தொடர்புகளும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு பாடங்களுக்கும் அதற்கான பயிற்சிகள் அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. நாலு வருடங்களில் சுமார் 450,000 மடிக்கணனிகள் விநியோகிக்கப்பட்ட அதே தருணம் முதல் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு எந்தெந்த விதங்களில் கற்பிக்கலாம் என்ற பயிற்சிகள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகின்றன. 

அதே திட்டத்தின் மூலம் நாட்டின் பொதுச் சதுக்கங்களிலெல்லாம் இலவசமாக இணையத்தளத் தொலைத் தொடர்புகள் உண்டாக்கப்பட்டன. நகரங்களுக்கு மட்டுமன்றி கிராமங்களுக்கும் அதே வசதிகள் கிடைக்கின்றன. அதற்கும் மேலாக ஒவ்வொரு பாடசாலைப் பிள்ளைக்கும் மாதாமாதம் 50 ஜிகாபைட் இலவச இணையத் தொடர்பு கொடுக்கப்படுகிறது. 

தபரே ரோஸாஸ் என்ற ஜனாதிபதியே இத்திட்டங்களைப் பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். நாட்டின் ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வி கிடைக்கவேண்டுமென்பது அவரது கனவாக இருந்தது. அதைச் செயற்படுத்த அவர் ஒவ்வொரு மாணவருடைய டிஜிடல் கல்விக்காகவும் 100 டொலர்களைச் செலவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உலகின் பல நாடுகளைப் போலவே உருகுவேயிலும் பாடசாலைகள் மூடப்பட்டன. கல்வியைப் பிள்ளைகள் வீட்டிலிருந்து தொலைத்தொடர்புகள் மூலமே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை உண்டாகியது. அச்சமயத்தில் பக்கத்து நாடுகளில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் இல்லாத அளவுக்கு உருகுவே மாணவர்கள் டிஜிடல் கல்விக்குத் தயாராக்கப்பட்டிருந்தார்கள். 

தென்னமெரிக்காவின் மில்லியன் கணக்கான மாணவர்களின் கல்வி நிலைமை கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் சீரழிந்திருக்கும்போது உருகுவேயில் கிராமப்பகுதி மாணவர்களிலும் 95 % க்கும் அதிகமானவர்கள் நடாத்தப்படும் டிஜிடல் வகுப்புக்களில் ஆர்வத்துடன் பங்கெடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக டிஜிடல் முறைக் கல்வியை அம்மாணவர்கள் விரும்பி ரசிப்பதாகவும் அந்த நாட்டுக் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *