தமிழ்நாட்டுச் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் 25 %, கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளவர்கள்.

ஜனநாயக மாற்றங்களுக்கான அமைப்பு [ Association of Democratic Reforms ] தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சமர்ப்பித்திருக்கும் தங்களது விபரங்களை ஆராய்ந்ததில் அவர்களில் 25 விகிதமானவர்கள் தங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த சட்டசபை அங்கத்தினரிடையே அது 19 விகிதமாக இருந்தது. அதாவது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 42 பேரைக் கொண்டிருந்த சட்டசபை இப்போது அதேபோன்ற 57 பேரைக் கொண்டிருக்கிறது.   

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், கொலை முயற்சிக் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும், கற்பழிப்பு உட்பட்ட பெண்களுக்கெதிரான குற்றஞ் சாட்டப்பட்டமூன்று பேரும் இவர்களுள் அடக்கம்.  

2016 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரிச் சொத்து மதிப்பு 8.21 கோடியாக இருந்தது. அது இந்தத் தேர்தலில் 12.27 கோடி ரூபாய்களாக அதிகரித்திருக்கிறது. கடந்த தேர்தலில் 170 சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர், இம்முறை அது 192 ஆக அதிகரித்திருக்கிறது.

111 தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும், 58 அஇஅதிமுக-வைச் சேர்ந்தவர்களும், 14 காங்கிரஸ் கட்சிக்காரரும், பா.மு.க-வைச் சேர்ந்த மூவரும், மூன்று பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களும், விடுதலைச் சிறுத்தைகளின் ஒருவரும், கம்யூனிஸ்ட் (CPI) ஒருவரும் கோடிக்கும் அதிகமான ரூபாய்கள் சொத்துள்ளவர்கள்.

அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரிச் சொத்து 11.78 கோடி ரூபாய்களாகவும், திமுக- வைச் சேர்ந்தவர்களின் சொத்து சராசரி 12.96 ரூபாய்களாகவும் இருக்கிறது. பா.ஜ.க உறுப்பினர்களின் சராசரிச் சொத்து 11.12 கோடி ரூபாய்கள். மிக அதிகமான சராசரிச் சொத்து மதிப்புள்ளவர்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகும். அவர்களுடையை சராசரிச் சொத்தின் பெறுமதி  16.57கோடி ரூபாய்கள்.

பத்து லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டவர்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *