ஐரோப்பாவின் கொரோனாத்தொற்றுப் பாடசாலையில் நோர்வே மோசமான மாணவராகியிருக்கிறது.
கடந்த காலக் கொரோனா அலைகளின் சமயத்திலெல்லாம் இறுக்கமாக எல்லைகளை மூடிக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து நாட்டுக்குள் கொரோனாத்தொற்றுக்களைக் குறைவாகவே வைத்திருந்த நாடு நோர்வே. ஆனால், ஒமெக்ரோன் அலையால் நாடு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறது. எனவே, தளர்த்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சமீப மாதங்களில் கொரோனாத்தொற்றுக்கள் நோர்வேயில் அடிக்கடி உச்சங்களைத் தொட்டன. டிசம்பர் மாத ஆரம்பத்தில் நடந்த நத்தார் விருந்தொன்றில் பங்குபற்றியவர்களிடையே பரவிய ஒமெகிரோன் திரிபுத் தொற்றானது நிலைமையைப் படு மோசமாக்கியிருப்பதாக நோர்வேயின் தொற்றுநோய்ப் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது.
லட்சம் பேரில் சுமார் 690 பேருக்குத் தொற்றியிருந்தது கடந்த இரண்டே வாரங்களில் 934 ஆகியிருக்கிறது. ஐரோப்பாவின் குட்டி நாடுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் நோர்வேயிலேயே தற்போது கொரோனாப்பரவல் மிக அதிகமாக இருக்கிறது. இள வயதினரிடையேயே தொற்றுக்கள் அதிகமாகி வருகின்றன.
வாராவாரம் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு வருகின்றன. அவைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று நோர்வேயின் மக்கள் ஆரோக்கியத் திணைக்களம் எச்சரித்திருக்கிறது. அத்துடன், இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களை விரைவில் அதைச் செய்யும்படி அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்