தொற்றுக்குள்ளாகி சுவாசத்தில் பிரச்சினைக்குள்ளாகிய உதைபந்தாட்டக்காரர் கிம்மிச் தடுப்பூசி எடுக்கப்போகிறார்.

ஜேர்மனியின் பிரபல உடைபந்தாட்ட வீரர் ஜோசுவா கிம்மிச் தடுப்பூசி எடுக்காமல் தவிர்த்துவந்த பிரபலங்களில் ஒருவராகும். சமீபத்தில் அவர் தொற்றுக்குள்ளாகித் தன்னைத் தனிமைப்படுத்தவேண்டியதாயிற்று. அத்துடன் நுரையீரலிலும் பாதிப்புக்களை உணர்ந்தார். விளைவாக, தடுப்பூசி எடுக்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

நீண்டகால ஆராய்ச்சிக்குட்படாத தடுப்பு மருந்தை நம்பப் பயமாக இருந்ததாலேயே தான் அதைத் தவிர்த்ததாகக் கூறும் கிம்மிச் தான் தடுப்பூசி – எதிர்ப்பாளரல்ல என்று குறிப்பிடுகிறார். நவம்பர் மாதத்தில் தொற்றுக்குள்ளாகிய கிம்மிச் அதன் விளைவால் அடுத்த வருடம் வரை உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாட முடியாது. தனது சுவாசம் பாரமாக இருப்பதாக உணர்வதால் வழக்கம்போலத் தன்னால் பயிற்சிகளில் ஈடுபட முடியாமலிருப்பதாகக் குறிப்பிடுகிறார் கிம்மிச்.

ஜேர்மனியின் சட்டப்படி தடுப்பூசி எடுக்காத தொழிலாளி ஒருவர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தனிமைப்படுத்தவேண்டிய நிலைமை உண்டாகினால் அவருடைய சம்பளத்தை முதலாளி நிறுத்திவைக்கலாம். கிம்மிச் தொற்றுக்குள்ளாகியதால் அவரது விளையாட்டுக்குழு பாயன் மியூனிச் அதையே செய்தது.

பாயன் மீயூனிச் குழுவின் செர்ஜ் கினாப்ரி, ஜமால் முஸியாலா, எரிக் மக்ஸிம் சுப்போ-மூட்டிங், மைக்கல் கியூசான்ஸ் ஆகிய விளையாட்டு வீரர்களும் கிம்மிச் போன்றே தடுப்பூசி எடுக்காமல் தவிர்த்து வந்து தொற்றுக்குள்ளாகியவர்களாகும். அவர்களும் இவ்வருடம் முடியும் வரை விளையாட்டுகளில் கலந்துகொள்ள முடியாது, சம்பளமும் பெறமுடியாது. அவர்களும் தடுப்பூசி எடுத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்