நத்தாருக்கு முன் சில கட்டுப்பாடுகள் பாதுகாப்புச் சபை கூடுகிறது.
பிரிட்டிஷ் பயணிகள் மீது கவனம்.
சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் அதிபர் மக்ரோன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை கூட்டப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நத்தார் விடுமுறைக்காக நாட்டின் சகலபாடசாலைகளும் நாளையுடன் மூடப்படுகின்றன.
ஒமெக்ரோன் உட்பட தொற்றுநிலைவரம் குறித்து ஆராயவும் நத்தார் புதுவருட கொண்டாட்ட காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகளைத் தீர்மானிப்பதற்காகவுமே பாதுகாப்புச் சபை கூடுகின்றது.விடுமுறை காலப் பகுதியில் அவசரசிகிச்சைப் பிரிவுகளில் நோயாளர் எண்ணிக்கை 4ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் புதிய சில தீர்மானங்கள் வார இறுதியில் எடுக்கப்படும் என்றதகவலை அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். நத்தார் குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் விடுமுறைப் பயணங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பாகவே தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இங்கிலாந்தில் இருந்து வருகின்ற சகலபயணிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்குகின்ற முடிவும் எடுக்கப்படலாம் என்று அறியப்படுகிறது. இங்கிலாந்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை பதிவுசெய்யப்படாத எண்ணிக்கையாக 78,610 தொற்றுக்கள்நேற்றுப் பதிவாகியுள்ளன. அங்கு ஒமெக்ரோன் வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது.
இங்கிலாந்தில் இருந்து வருவோர் எவராயினும் அவர்கள் தடுப்பூசி ஏற்றியவராக இருப்பினும் 24 மணி நேரங்களுக்குள் செய்யப்பட்ட வைரஸ் சோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
110,000 போலி சுகாதாரப் பாஸ்கள்!
இதேவேளை, நாடெங்கும் ஒரு லட்சத்துப் 10 ஆயிரம்போலி சுகாதாரப் பாஸ்கள் புழக்கத்தில்உள்ளன என்பது தெரியவந்துள்ளது.இவை தொடர்பாக இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் நானூறு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று ஏஎப்பி செய்தி ஒன்றுதெரிவிக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.