கொவிட் 19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் முதலாவது லத்தீன் அமெரிக்க நாடு ஈகுவடோர்.
உலகில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தங்கள் குடிமக்கள் கொவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை ஈகுவடோர் அதை அறிமுகப்படுத்துகிறது.
ஈகுவடோரின் அரசியலமைப்புச் சட்டத்திலிருக்கும் “நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கானவையைச் செய்வது அரசின் கடமை,” என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட நடவடிக்கையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த நாட்டில் ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்னரே பொதுச் சேவை இடங்களுக்கு ஒருவர் போகும்போது தனது தடுப்பூசிச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
சமீப நாட்களில் நாட்டில் ஒமெக்ரோன் திரிபு பரவிவருவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்தே கட்டாயத் தடுப்பு மருந்து என்ற சட்டம் கொண்டுவரபட்டது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அம்மருந்தால் குறிப்பிட்ட நபருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாமென்ற மருத்துவரின் கடிதம் இருந்தால் மட்டுமே அவர் தடுப்பு மருந்தை எடுக்காமலிருக்கலாம்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் 57 விகிதமானோர் இதுவரை தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஈகுவடோரிலோ 77 % மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்