இஸ்ராயேலில் வாழும் ஆஸ்ரேலியர் அங்கிருந்து 9999 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதிவரை வெளியேறத் தடை.

விவாகரத்து வழக்கொன்றில் மாட்டிக்கொண்ட 44 வயதான ஆஸ்ரேலியர் ஒருவருக்கு இஸ்ராயேல் நாட்டை விட்டு வெளியேறத் தடை போட்டிருக்கிறது. நாவொம் ஹப்போர்ட் என்ற ஆஸ்ரேலியர் விடுமுறைக்காகக்கூட இஸ்ராயேலை விட்டு 31.12.9999 ம் ஆண்டுவரை வெளியேறத் தடை போடப்பட்டிருக்கிறது.

விலகிவிட்ட மனைவி தனது குழந்தைகளுடன் தனது நாடான இஸ்ராயேலுக்கு மீண்டும் திரும்பியிருந்தார். எனவே ஹப்போர்ட் தனது குழந்தைகளுக்கு அருகே வாழ்வதற்காக 2012 ம் ஆண்டு இஸ்ராயேலுக்கு குடிபெயர்ந்தார். அவர் ஒரு மருந்து நிறுவன இரசாயண ஆராய்வாளராகும்.

ஹப்போர்ட்டின் மாஜி மனைவி இஸ்ராயேல் நீதிமன்றத்தில் தனது பிள்ளைகளுக்கு அவர்களின் தந்தையார் மாதாமாதம் செலவுக்கான தொகையில் ஒரு பங்கைத் தரவேண்டும் என்று வழக்குப் பதிவுசெய்தார். அதை 2013 இல் விசாரித்த நீதிமன்றம் ஹப்போர்ட் 3 மில்லியன் டொலரைத் தனது பிள்ளைகளின் செலவுக்காகக் கொடுக்கவேண்டும், அல்லது 8000 வருடங்கள் இஸ்ராயேலை விட்டு வெளியேறலாகாது என்று  No Exit Order கொடுத்திருக்கிறது.

இஸ்ராயேல் சட்டப்படி விவாகரத்துச் செய்யும்போது கணவன் தனது பிள்ளைகளுக்காகத் தனது முழு வருமானத்தையோ, அதைவிடவும் அதிகமாகவோ கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இல்லாவிடில் நீதிமன்றம் குறிப்பிட்ட நபரைச் சிறைக்கனுப்பவோ, வெளியேற்றத் தடை போடவோ செய்யும்.

ஹப்போர்ட் மட்டுமன்றி ஆஸ்ரேலியர்கள் சுமார் 100 க்கும் அதிகமானோர் இதே போன்ற நிர்க்கட்டத்தில் மாட்டிக்கொண்டிருப்பதாக இவ்விடயத்தைப் பற்றி உலகளவில் கவனத்தைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆஸ்ரேலியர்கள் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றைச் சேர்ந்தவர்களும் இதே நிலைமையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூதுவராலயங்கள் தத்தம் குடிமக்கள் எத்தனை பேர் இதே நிலைமையில் இஸ்ராயேலில் மாட்டியிருக்கிறார்கள் என்று வெளியிட மறுப்பதாகவும் பத்திரிகையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

அமெரிக்கா இந்தச் சட்டம் பற்றித் தனது குடிமக்களுக்கான இஸ்ராயேல் பற்றிய விபரங்களில் வெளியிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்