உங்கள் ஆரோக்கிய விபரங்களை உடலுக்குள் பதிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை சுவீடிஷ் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

DSruptive என்ற சுவீடிஷ் நிறுவனமொன்று விபரங்களை நுண்ணிய துளியொன்றில் பதிந்துகொண்டு அதை உடலில் பொருத்திக்கொள்ளும் தொழில் நுட்ப வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு நெல் மணியளவான தகடொன்றில் ஒரு நபரின் கொவிட் 19 தடுப்பூசி மற்றும் ஆரோக்கிய விபரங்களைப் பதிந்து அதை அவரது கைக்குள் செலுத்திவிடலாம். 

இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகெங்கும் சரளமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக நாம் கடைகளில் கொள்வனவு செய்யும்போது எங்கள் அடையாள அட்டையிலிருக்கும் அந்தத் தகட்டை வாசிக்கும் இயந்திரத்துடன் உரசிவிட்டுப் போகிறோம். எங்கள் வங்கிக்கணக்கு விபரங்கள் எங்கள் கடன் அட்டையில் இருக்கின்றது, அது எங்கள் அனுமதியுடன் நேரடியாகக் கொள்வனவுத் தொகையைச் செலுத்திவிடவும் செய்கிறது.

‘இந்தத் தொழில்நுட்பத்தில் இருக்கும் பலவீனம் குறிப்பிட்ட விபரங்களை வாசிக்கக்கூடிய இயந்திரம் எவரிடம் இருப்பினும் அவரால் மற்றவரின் விபரங்களை களவெடுக்க இயலும். ஆனால், அப்படியாக நடக்காமல் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது அதிகாரங்களின் கடமையாகும்,’ என்கிறது அந்த நிறுவனம். ஒருவரது விபரங்களைக் கொண்ட தகடு அவரிடம் பொருத்தப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியப்போவதில்லை. அத்தகட்டில் சக்திக் கலன் ஏதுமில்லை. எனவே அதனால் தானாக இயங்க முடியாது. அது குறிப்பிட்ட நபரின் நடமாட்டங்களைப் பதிவுசெய்யவும் இயலாது.

சாள்ஸ் ஜெ. போமன்