“நெருங்கிய உறவை இழந்தபின் பெருநாளின் தனிமை எப்படியிருக்குமென்று உணர்கிறேன்!” – எலிசபெத் மகாராணி.
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் வழக்கம்போலத் தனது நத்தார் பெருநாளை சந்திரிங்காம் விடுமுறை இல்லத்தில் கொண்டாடவில்லை. விண்ட்சர் அரண்மனையில் தனது மகன் சார்ல்ஸுடன் அவர் அதைக் கொண்டாடினார். அதற்கு முதலேயே நாட்டு மக்களுக்கான நத்தார் பெருநாள் செய்தியை அவர் பதிவு செய்திருந்தார்.
விண்ட்சர் மாளிகையில் அரச குடும்பத்தினர் தமது பெரு நாளைக் கொண்டாடும் சமயத்தில் அந்த வளாகத்துக்குள் ஒரு 19 வயது நபர் காலையில் ஆயுதத்துடன் நுழைந்திருக்கிறார். அனுமதியின்றி உள்நுழைவு நடந்ததாகப் பாதுகாப்புக் கருவிகள் தெரிவிக்கவே அந்த நபர் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தனது பெருநாள்ச் செய்தியில் மறைந்த கணவருடன் சேர்ந்து தான் எடுத்துக்கொண்ட படம் ஒன்றின் அருகில் நின்று மகாராணி பேசினார். தனது செய்தியில் அவர் “உறவுகளின்றித் தனிமையாகியவர்களின் பெரு நாள் எப்படியிருக்கும் என்று உணர்வதாக,” உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
அனுமதியில்லாமல் வெளியார் அரச குடும்பத்தினரின் மாளிகைக்குள் நுழைந்தமை மிக அரிதாகவே நடந்திருக்கிறது. 1982 இல் நபரொருவர் வேலியால் பாய்ந்து, மகாராணி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார். 2016 இல் ஏற்கனவே கொலைக்காகத் தண்டனை பெற்ற ஒருவன் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்து, “மகாராணி உள்ளிருக்கிறாரா?” என்று விசாரித்திருக்கிறான்.
சாள்ஸ் ஜெ. போமன்