“கில்லிங் பீல்ட்ஸ்” உட்பட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்த ஜோன் ஸ்னோ ஓய்வுபெற்றார்.

“உலக நடப்புக்களை என்னை நம்பி எனக்கு எழுதி, பிரசுரித்து, வெளியிட்ட அனைவருக்கும் எனது நன்றி! உங்கள் வீட்டுத் தொலைக்காட்சித் திரைக்கு முன்னாலிருந்து எனது நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு தினசரி அவற்றைக் கொடுக்க முடிந்ததில் எனக்கு மிகச் சந்தோசம்,” என்று நெகிழ்வுடன் கூறி பிரிட்டிஷ் பத்திரிகையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோ Channel 4, லிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

32 வருடங்களாக சானல் 4 இல் பணியாற்றிய ஜோன் ஸ்னோ 1947 இல் பிறந்தவர். தனது 18 வது வயதில் தன்னார்வத்துடன் உகண்டாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். லிவர்பூல் பல்கலைக்கழகச் சட்டத்துறை மாணவராக இருந்த ஜோன் ஸ்னோ 1970 களில் நடந்த நிறவெறிக்கெதிரான ஊர்வலங்களில் பங்குபற்றியதற்காகப் பல்கலைக்கழக அதிகாரத்தால் வெளியேற்றப்பட்டார். 

LBC இல் 1973 இல் சேர்ந்த ஜோன் ஸ்னோ அதையடுத்து ஐ.டி.என் நிறுவனத்தில் எட்டு வருடங்கள் கடமையாற்றினார். அந்த நிறுவனத்துக்காக வாஷிங்டனில் பணியாற்றிய அவர் 1989 இல் சானல் 4 இல் இணைந்தார். 

அங்கே தனது பத்திரிகையாளர் திறமை, நேர்காணல் திறமை, துணிவான நடவடிக்கைகளுடன் தளராமல் செயலாற்றிப் பலரையும் கவர்ந்தார். நிகழ்ச்சிகளில் வித்தியாசமான நிறத்துடன் டை கட்டிவருவதும் அவர் மீது கவனத்தை வைக்கத் தூண்டியது எனலாம். 

தனது ஆராய்வு நிகழ்ச்சிகளில் உலகில் பல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்டு, சர்வதேச அளவில் தமது குரலைக் கேட்கவைக்க முடியாமல் தத்தளித்தவர்களின் நிலைமைகளை எடுத்துச் சொல்லியது ஜோன் ஸ்னோவுக்கு உலகெங்கும் பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்