கடனால் மூழ்கடிக்கப்பட்டிருந்த ஜெர்மனிய நகரத்துக்கு கொரோனாத் தடுப்பு மருந்து தங்கச் சுரங்கமாகியது.

கொரோனாத்தொற்றுக் காலமும் அதைச் சுற்றிய விளைவுகளும் உலகில் பலரை, பல நிறுவனங்களை, அரசுகளை, நகரங்களைப் பல வழிகளிலும் பாதித்திருக்கின்றன. ஆனால், ஒரு சில இடங்களுக்கு அதிர்ஷ்டச் சீட்டுப் பரிசுமழையாகவும் மாறியிருக்கிறது. அப்படியொரு நகரம் தான் ஜேர்மனியின் மெய்ன்ஸ் [Mainz] ஆகும். 

220,000 மக்கள் தொகையைக் கொண்ட மெய்ன்ஸ் ஜெர்மனியின் தென்மேற்குப் பிராந்தியத்திலிருக்கிறது. அந்த நகரத்தில் தான் கொமிர்னாட்டி தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கை வகித்த பயோண்டெக் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது. 

1400 களில் யோஹான் குத்தன்பெர்க் என்பவர் இதே நகரத்தில் தான் புத்தகங்களில் அச்சுப்பதிக்கும் கலையைக் கண்டுபிடித்தார். சுமார் அறுநூறு வருடங்களுக்குப் பின்னர் அதே நகரில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனமான பயோண்டெக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் கொமிர்னாட்டியை விருத்திசெய்வதில் அத்திவாரமாக இருந்தது.

மெய்ன்ஸ் நகரம் நீண்ட காலமாகவே பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது. தற்போதைய நிலையில் அதன் மீதுள்ள கடன் பளு 1.3 பில்லியன் எவ்ரோவாகும். சில வருடங்களாகவே உலகின் மருத்துவத் தொழில் நுட்பத்தில் சிறந்த நிறுவனங்களைத் தன்னிடம் ஈர்ப்பதை ஒரு குறிக்கோளாகச் செயற்பட்டு வந்த மெய்ன்ஸ் நகர அதிகாரத்தின் வெற்றியே பயோண்டெக் நிறுவனமாகும். 

கொவிட் 19 தடுப்பு மருந்தான கொமிர்னாட்டியின் வெற்றியால் இவ்வருட இறுதியில் மெய்ன்ஸ் நகரம் தனது கடன் பளு முழுவதையும் தீர்த்துவிடும் என்று குறிப்பிடப்படுகிறது. 2021 இன் மூன்றாவது காலாண்டில் மட்டுமே பயோண்டெக் நிறுவனம் 4.7 பில்லியன் பில்லியன் எவ்ரோவை இலாபமாகக் காட்டியது. வருடம் முழுவதுக்குமான அதன் இலாபம் 16 – 17 பில்லியன் எவ்ரோ ஆகும். 

பயோண்டெக் நிறுவனத்தின் வெற்றியில் கொமிர்னாட்டி ஒரு சிறு பங்கே என்று பல அவதானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். மலேரியாவை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்து, வெவ்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சை முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்து வருவதிலும் பயோண்டெக் பெரும் பெற்றுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் பயோண்டெக் நிறுவனமும், மெய்ன்ஸ் நகரமும் பெரும் பலனை அடையவிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ.போமன்