நாட்டின் எல்லைகளை ஜனவரி முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறக்கவிருக்கிறது லாவோஸ்.
தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பயணிகளுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் தமது நாடுகளைச் சமீபத்தில் திறந்திருக்கும் நாடுகளில் சில தாய்லாந்து, வியட்நாம் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வரவு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக அவசியமாகக் கருதப்படும் லாவோஸும் சுற்றுலாப் பயணிகளை ஜனவரி முதலாம் திகதி முதல் வரவேற்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா, கனடா, சீனா, ஆஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் சில உட்பட்ட பதினேழு நாடுகளுக்கு மட்டும் ஆரம்பக் கட்டத்தில் லாவோஸ் சுற்றுலா அனுமதி கொடுக்கும். அவர்கள் வியன்சியான், லுவாங் பிரபாங், வாங் வியாங் ஆகிய முக்கிய மூன்று பிரபல நகரங்களுக்கும் விஜயம் செய்யலாம். மற்றைய நகரங்கள் ஏப்ரல் – ஜூலை மாதமளவில் படிப்படியாகத் திறக்கப்படும்.
வருடாவருடம் 4.7 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் லாவோசுக்கு விஜயம் செய்வதுண்டு. கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க நாடு மூடப்பட்டுச் சுமார் 18 மாத காலமாகிறது. 2020 இல் நாட்டின் சுற்றுலாப்பயணிகள் தொகை 80 % ஆல் வீழ்ச்சியடைந்தது. கால் நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த பொருளாதாரம் 0.4 % ஆல் குறைந்ததாக உலக வங்கியின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்