பிரிட்டிஷ் இராணுவத்தில் கடமையாற்றும் ஹர்பிரீத் சாந்தி தென்முனைக்குத் தனியாகச் சென்றடைந்தார்.
இந்தியப் பின்னணியைக் கொண்ட 32 வயதான ஹர்பிரீத் சாந்தி தென் முனைக்குத் தன்னந்தனியாகச் சென்றடைந்த வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். தனியே அண்டார்ட்டிகாவின் சுமார் 1,130 கி.மீ தூரத்தைக் கடப்பது என்பது அதை எவ்வித உதவியும், எவருடைய உதவியுமில்லாமல் தாண்டுவது ஆகும்.
எவரும் உணவுக்கான உதவியையோ, இடையே தங்கித் தன்னைச் சூடாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பமோ தனியே செல்கிறவர்களுக்குக் கிடையாது. நாய்கள் இழுக்கும் வண்டி அல்லது காற்றாறிகளால் இழுக்கப்படும் வண்டியையும் பாவிப்பதில்லை. காலில் பனிச்சறுக்கல் சப்பாத்தைப் போட்டுக்கொண்டு தனக்கான சகலத்தையும் தானாகவே செய்துகொண்டு சுமார் – 50 செல்ஸியஸ் வரை எட்டும் குளிரில் நாற்பது நாட்கள் நடந்திருக்கிறார் ஹர்பிரீத் சாந்தி. தனது பொருட்களைத் தன்னுடன் ஒரு வண்டியில் போட்டு இழுத்துக்கொண்டே அவர் அத்தூரத்தைக் கடந்திருக்கிறார்.
“நான் தென் முனையை அடைந்துவிட்டேன், பனி கொட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தக் காலநிலை, சூழல் பற்றியெதுவுமே நான் அறிந்ததில்லை. இப்போது அது என்னைச் சுற்றியிருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இதை நான் செய்தேன் என்பது முக்கியமல்ல. நீங்கள் உங்களுடைய எல்லைகளை உடைக்க முயற்சி செய்யவேண்டும். எந்த நோக்கங்களுடன் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் பார்க்கிறார்கள் என்பதை யோசிக்காமல் உங்கள் குறிக்கோள்களை நீங்களே அடையவேண்டும்,” என்று தனது சாதனையைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஹர்பிரீத் சாந்தி.
சாள்ஸ் ஜெ. போமன்