இந்தியாவின் சந்தை அமெரிக்கப் பன்றி இறைச்சிக்காகத் திறக்கப்பட்டது.
பன்றி இறைச்சித் தயாரிப்பில் உலகின் மூன்றாவது இடத்தையும், அந்த இறைச்சியின் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்திலுமிருக்கும் நாடு அமெரிக்கா. ஆனால், அமெரிக்க – இந்திய வர்த்தகத்தில் இப்போது தான் முதல் தடவையாக அமெரிக்கப் பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதித்திருக்கிறது.
“சுமார் கால் நூற்றாண்டாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்தியாவின் சந்தையில் அமெரிக்கப் பன்றி இறைச்சி விற்கப்படவிருக்கிறது. இது அமெரிக்க விலங்கு வளர்ப்பு, இந்தியக் கொள்வனவாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்,” என்று அமெரிக்க விவசாய வர்த்தகப் பிரிவின் பிரதிநிதிகள் குறிப்பிட்டார்கள்.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கா விஜயம் செய்தபோது ஜனாதிபதி பைடனுடன் செய்த பேச்சுவார்த்தைகளின்படி இரண்டு நாடுகளுக்கும் இடையேயான விவசாயப் பொருட்கள் சிலவற்றின் வர்த்தகத்தை ஆரம்பிக்கவும், ஏற்கனவே இருக்கும் வர்த்தக உடன்படிக்கைகளைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அதையடுத்தே பன்றி இறைச்சி உட்பட சில விவசாயப் பொருட்களை இந்தியச் சந்தையில் விற்க அமெரிக்காவுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்