தமிழர் திருநாள்…
தைத்திங்கள் வந்ததே
புது வசந்தம் தந்ததே
பொங்கி வருகுதே ஆனந்தம்
அள்ளித் தந்ததே பேரின்பம்!
வண்ண வண்ண மாகோலமிட்டு
மாவிலை தோரணப் பந்தலிட்டு
தேன்கனி கரும்பினை சாரம் கட்டி
பச்சரிசி புது வெல்லம் பொங்கலிட்டு
பலவகை பலகாரம் படையலிட்டு
பகலவனின் பாதம் போற்றும் தமிழர்களின் பெருவிழா!
அல்லும் பகலும் அயராது உழைத்து
உதிரத்தை உரமாய் விதைத்து
முத்துக்களை விளைவித்த முத்துச்
செல்வங்களின் திருவிழா!
பலவண்ண பொட்டு வைத்து
அழகழகாய் பூக்கள் வைத்து
அமிழ்தான பொங்கலிட்டு
செல்வப் பிள்ளைகளாய் ஆநிரைகளை
கொண்டாடும் ஆனந்தப் பெருவிழா!
புத்தம் புது உடை அணிந்து
குதூகலமாய் ஒன்றிணைந்து
சீறி வரும் காளைகளை வீரத்தமிழ் சிங்கங்கள் அடக்குவதை விழியார கண்டு அகம் மகிழும் காளையர்களின் திருவிழா!
சாதி மத பேதமில்லா
வீரத் தமிழர்களின் திருநாளாம்
உயிர் காக்கும் உழவர்களின் பெருநாளாம்
நம் தமிழர்களின் தைத் திருநாளாம்!…
எழுதுவது :மா. அனுசுயா
முதுகலை முதலாமாண்டு தமிழ் மாணவி,
ஆத்தூர், சேலம்.