ஒமெக்ரோன் பரவல் மூலம் கொவிட் 19 பெரும் தொற்று நிலையிலிருந்து ஆங்காங்கு பரவும் வியாதியாகிறது.
இஸ்ராயேல் தனது குடிமக்களுக்கெல்லாம் கொவிட் 19 க்குப் பாதுகாப்பாக நான்காவது தடுப்பூசியைப் போட்டுவரும் தருணத்தில் ஐரோப்பிய மருத்துவ ஒன்றமைப்பு அது சரியானதா என்று சிந்தித்து வருகிறது. காரணம் படு வேகமாகப் பரவிவரும் ஒமெக்ரோன் திரிபானது பெரும்பாலான ஐரோப்பியர்களைத் தொற்றும் என்பது தடுக்கமுடியாதது என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு எச்சரித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் பல தனிப்பட்ட முறையிலும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒமெக்ரோன் திரிபானது பிராந்தியத்தில் பெரும்பாலானோரைத் தொற்றுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிடுகின்றன. அத்திரிபினால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் மருத்துவ சேவையின் உதவியை நாடத் தேவையில்லாத நிலையிலிருப்பதால் மருத்துவ நிபுணர்கள் அப்பரவல் பற்றி மெத்தனமாகவே இருக்கிறார்கள்.
முதன் முதலாகத் தென்னாபிரிக்காவில் காணப்பட்ட ஒமெக்ரோன் தொற்றானது அங்கே தனது அதியுயர் எண்ணிக்கையைத் தொட்டபின் படிப்படியாகக் குறைந்து வருவதும் மருத்துவ உலகுக்கு ஓரளவு மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது எனலாம்.
ஆம்ஸ்டர்டாம் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பியப் பிராந்தியத்தில் மருந்துகளை அனுமதிக்கும் அமைப்பின் தொற்றுநோய்த் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் மார்க்கோ கவாலேரி மீண்டும், மீண்டும் தடுப்பூசிகளைக் கொடுப்பதைப் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார்.
“கொரோனாத் தொற்றுக்களின் அந்திமக் காலம் எதுவென்று தெரியாவிட்டாலும் அப்படி ஒரு நாள் வரும். அதுவரை நான்கு மாதங்களுக்கொரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லதா என்பது கேள்விக்குரியது. அது மக்களின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தும். தடுப்பு மருந்து எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பதும் கேள்விக்குறியே,” என்கிறார் கவாலேரி.
நாம் இப்போதும் கொவிட் 19 பெரும் தொற்று என்ற ஆபத்தான காலத்திலேயே இருக்கிறோம் என்பதை அவர் சுட்டிக் காட்டும் அதே சமயம் ஒமெக்ரோன் திரிவின் தொற்று வேகம் அவ்வியாதி பற்றிய ஒரு நம்பிக்கைக் கீற்றை உண்டாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
“படுவேகமாகப் பரவி வரும் ஒமெக்ரோன், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி கொடுத்த நோய் எதிர்ப்புச் சக்திக்கு மேலாக இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து விடுகிறது. அதனால், நாம் இவ்வியாதியின் பெருந்தொற்று என்ற கால கட்டத்திலிருந்து ஆங்காங்கு, அவ்வப்போது தொற்றும் வியாதிப் பரவல் என்று கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கக்கூடும்,” என்கிறார் கவாலேரி.
சாள்ஸ் ஜெ. போமன்