இவ்வருடத்தின் முதலாவது தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பல தேர்தல்கள் இவ்வருடம் நடக்கவிருக்கின்றன. தற்போதையே நிலையில் 221 – 213 என்ற அளவிலிருக்கும் டெமொகிரடிக் கட்சி – ரிபப்ளிகன் கட்சியினரின் நிலைப்பாடு இத்தேர்தல்களின் பின்னர் மாறலாம். செனட் சபையில் 50 – 50 என்ற பிரதிநிதித்துவத்தில் இருக்கும் நிலைப்பாடு பாராளுமன்றத்திலும் ரிபப்ளிகன் கட்சியினருக்குச் சாதகமாக மாறினால் ஜோ பைடனால் தனது பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
எனவே வரப்போகும் ஒவ்வொரு தேர்தலும் இரண்டு கட்சிகளுக்குமே முக்கியம் என்ற நிலைமையில் இரு கட்சிகளுமே தமது வாக்காளர்களை தேடி இறங்கியிருக்கின்றன. தான் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதா என்று இதுவரை அறிவிக்காவிட்டாலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முழு உற்சாகத்துடன் அரிசோனாவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
பல்லாயிரக்கணக்கான தனது விசிறிகளை புளோரன்ஸ், அரிசோனாவில் டிரம்ப் சந்தித்தபோது கடந்த தேர்தலின் பின்னர் குறிப்பிட்டது போலவே தொடர்ந்தும் “எனது தேர்தல் வெற்றியைப் பறித்தெடுத்து அமெரிக்கர்களை ஏமாற்றி விட்டார்கள்,” என்று குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர்கள் எல்லோரும் தனக்கு எதிரிகள் என்று வழக்கம்போலவே குறிப்பிட்ட டிரம்ப், டெமொகிரடிக் கட்சியினரும் ஜோ பைடனும் சேர்ந்து அமெரிக்காவைப் படு மோசமான பாதையில் கொண்டு செல்வதாகச் சாடினார். கொவிட் பரவல்களின் அதிகரிப்பு, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பணவீக்கம், சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்குக் காரணம் ஜோ பைடனே என்றும் குறிப்பிட்டார்.
பெரும் திருவிழா போன்ற சூழலில், சுமார் 30 நிமிடங்கள் தனது ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப்பின் பேச்சு “Newsmax” என்ற ஒரேயொரு தொலைக்காட்சிச் செய்தியால் மட்டுமே முழுசாக ஒளிபரப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்