வாக்குவன்மை கைவரப்பெற்றவர்களே |கடகம் பொதுப்பலன்கள்

புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், ஹி, ஹீ, ஹோ, ட, டி, டு, டே, டோ… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: சந்திரன், நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதி: குரு, செவ்வாய், சந்திரன். மாரகாதிபதி: சனி.


சிந்தனா சக்தியும், கற்பனைஆற்றலும், அறிவாற்றலும் வழங்கிடக்கூடிய மனக்காரகன் என்று கூறப்படும் சந்திர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்து நியாயத்தையும் நேர்மையையும் குறிக்கோளாகக் கொண்டு வாழும் வாக்கு வன்மை மிக்க கடக ராசி நண்பர்களே!

வாக்கு வன்மையும் எதையும் ஆராயக் கூடிய சக்தியும் உங்களுக்குண்டு. எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனநிலைக் கொண்டதுடன் பிடிவாத குணமும் கொண்ட உங்களுக்கு பொன்னையும் பொருளையும் விட புகழின் மீது அளவற்ற ஆசை இருக்கும். உங்களின் சுய பெருமைகளைப் பேசிக் கொள்வதில் அதிகமாகவே நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தைக் கொண்ட நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் அதை எப்படியும் முடித்தே தீருவீர்கள். உங்கள் மனதில் கடந்தகால நிகழ்கால சிந்தனையை விட எதிர்காலத்தைப் பற்றியே அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நடந்து போனதைப்பற்றியோ, அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றியோ எப்போதும் நீங்கள் கவலைப்படவே மாட்டீர்கள். ஒரு தோல்வி உண்டாகிறதா அதிலிருந்து மீள அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களின் திறமை, தகுதி, பலம் போன்றவற்றை நம்பி செயல்பட்டு வெற்றி பெறுவதைவிட எதிரியின் பலம், பலவீனம் பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். இரக்க குணமும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் நீங்கள் இருப்பீர்கள் என்றாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திர பகவான் வளர்வதும் தேய்வதுமாக வாழ்வதுபோல் உங்கள் வாழ்க்கையும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கொண்டதாகவே இருக்கும். என்றாலும், உங்களிடத்தில் மோதியோ போட்டி போட்டோ உங்களை யாராலும் வெல்ல முடியாது.

செயற்கரிய காரியங்கள் செய்து சாதனையாளராக விளங்க வேண்டும் என்று வாழ்ந்து வரும் உங்களுக்கு ஆற்றல் மிக்கவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்து உங்களை பலம் மிக்கவர்களாக மாற்றுவார்கள். அதனால் எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டாகி விடும். உணர்ச்சி வசப்படும்போது உங்களை சமாதானப் படுத்துவது கடினம். அதேபோல் உதவிக்காக ஒருவரை நீங்கள் நாடும்போது அவர் ஒத்து வராவிட்டால் எதுபற்றியும் கவலைப்படாமல் அவரை உதறித்தள்ளி விட்டு வேறு வழியைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். பட்டங்களும் பதவிகளும் உங்களை நாடி வரும். முப்பது வயதிற்கு மேல் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு.

உங்களில் சிலருக்கு போலீஸ், ராணுவம், சட்டம் போன்றவற்றிலும் அரசு வழியிலும் உயர்ப் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். உங்களை நம்பியவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் நீங்கள் அதனால் பல சமயங்களில் ஏமாற்றத்தையும் சந்திப்பீர்கள்.

களத்திரக்காரகன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு பாவியாக இருப்பதாலும், களத்திர ஸ்தானாதிபதியான சனி பகவானும் உங்கள் ராசிக்கு பாவியாக இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது யோசித்து செயல்பட்டால் மட்டுமே மண வாழ்க்கையில் உங்களால் மகிழ்ச்சியைக் காண முடியும், இல்லையெனில் குடும்ப வாழ்க்கை உங்களுக்கு குழப்ப வாழ்க்கையாகி விடும். கொடுத்தவற்றை வாங்கும் சக்தியற்றவர் நீங்கள் என்பதால் நீங்கள் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்பவும் வராமல் போகவும் வாய்ப்புண்டு என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எப்போதும் கவனமுடன் இருங்கள். லாட்டரி, ரேஸ், போட்டி பந்தயங்கள் போன்றவை உங்களுக்கு வெற்றியைத் தராது என்பதால் அதில் கவனத்தையும் பணத்தையும் செலுத்தி நஷ்டம் அடையாதீர்கள்.

உங்கள் ராசியின் அதிபதி மதி என்றழைக்கப்படும் சந்திரன் என்பதால் நீங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களாகவே வாழ்வீர்கள். கடல் தாண்டிச் சென்று வாழும் நிலையும் வாய்ப்புகளும் உங்களில் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பும் உங்கள் ராசியில் பிறந்தவர்களுக்கே அதிகம் உண்டு. நினைவுத்திறன் அதிகம் கொண்ட நீங்கள் எந்த விஷயத்தையும் வாதாடி வெற்றி காண்பீர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எதற்காகவும் அலட்டிக்கொள்ளாமல் உங்கள் நாவன்மையால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். திறமை, செல்வாக்கு, புகழ் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான நீங்கள் எத்தகைய சக்தி படைத்தவரையும் பணியவைக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பீர்கள். குடும்பத்தை விட பொதுச்சேவை புரிவதிலேயே உங்கள் நாட்டம் இருக்கும்.

கடவுள் பக்தி கொண்டவர்களாகவும், எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதுபற்றி யோசிக்காமல் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு நடப்பது நடக்கட்டும் என்ற முடிவிற்கு வந்து செயல்படக் கூடியவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். கால புருஷ தத்துவத்தின்படி உங்கள் ராசிநாதன் நான்காம் வீட்டிற்கு அதிபதி என்பதால் தாய்வழி ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும், தாய்வழி உறவுகளால் வாழக்கூடியவர்களாகவும் உங்களில் பலர் இருப்பார்கள். ஊருக்கெல்லாம் வழி காட்டும் நீங்கள் உங்களுக்கென்று வரும்போது புத்தி மழுங்கியவர்களாக மாறி விடுவீர்கள், எதிர்பாலினரால் பெருமளவில் ஏமாறக்கூடியவர்களாக நீங்களே இருப்பீர்கள்.

இவையெல்லாம் கடக ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது: சோதிடவித்தகர் பரணிதரன்