மூலதனம் இல்லாமல் செல்வந்தரானவர்களும் இருக்கிறார்கள்|கன்னி ராசிக்காரர் பொதுப்பலன்கள்

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள் மற்றும் அஸ்தம், சித்திரை 1, 2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும்,

மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்,

டோ, ப, பி, பு, ஷ, ண, ட, பே, போ… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: புதன்.

நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய்.

யோகாதிபதி: புதன், சுக்கிரன் சனி. பாதகாதிபதி: குரு.

மாரகாதிபதி: குரு, சந்திரன்.


அறிவாற்றலும் பேச்சில் கனிவும் நினைத்ததை சாதித்திடக்கூடிய வல்லமையும் பெற்ற கன்னி ராசி நண்பர்களே!

உங்கள் ராசிநாதன் புத பகவான் ஆவார், புதன் என்ற சொல்லுக்கு எல்லாம் தெரிந்தவர் என்று பெயர். வித்யாகாரகன் கல்விக்காரகன் என்று உங்கள் ராசிநாதனையே சொல்வோம்.

நீங்கள் வாழ்க்கையின் எதார்த்தங்களை உணர்ந்தவராக இருப்பீர்கள். காலத்தை நேரத்தை வீணாக்காமல் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வெற்றி அடைவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளைக் கூட எளிதில் முடித்துவிடும் ஆற்றல் கொண்டவர் நீங்கள்.

உங்களில் சிலர் மூலதனம் இல்லாமல் கூட பெரிய அளவில் செல்வந்தர் ஆகியுள்ளனர். அந்த அளவிற்கு உங்கள் வாக்கிற்கு மதிப்பும் பிறரை நம்ப வைக்கும் தன்மையும் உங்களை மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

உங்களுக்கு நண்பர்களாக வாய்ப்பவர்களே உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவார்கள். எதிர்ப்புகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் என்றாலும் அவற்றை முறியடிக்கும் வல்லமையும் உங்களிடம் இருக்கும். நாளை நடக்கப்போவதை இன்றே அறிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும் என்பதால் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கும். நீங்கள் எதையும் சிந்தித்து அதன்பிறகு செயலாற்றுவீர்கள். எதையும் திறமையாகச் செய்து புகழ்பெற வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது உங்கள் இயற்கைக் குணமாக இருக்கும். திறமையாகப் பேசுவதிலும், தர்க்கம் செய்வதிலும் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். பிறர் செய்யும் நன்மைகளை விட அவர்கள் செய்யும் குற்றங்களே உங்கள் பார்வையில் பளிச்சென்று தோன்றும். குற்றத்தைக்கண்ட இடத்திலேயே ஒளிவு மறைவில்லாமல் அதை எடுத்துக் கூறி குற்றம் செய்தவரை திருத்த நினைப்பதும் உங்கள் பழக்கமாக இருக்கும். உங்களைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள் உங்களுக்கென்று வரும்போது உங்க தன்மானம் தடுக்கும்.

எதிலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் நீங்கள் வாழ விரும்புவீர்கள். எதைச் செய்தாலும் மிக நன்றாக யோசித்தே செய்வீர்கள். உங்கள் தோற்றப் பொலிவில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கண்ணியமாக கௌரவமான ஆடை அணி வீர்கள். உங்களுக்குக் கோபம் அதிகமாக வராது வந்தாலும் வந்த வேகத்தில் தணிந்து விடும். ஆனால், உங்கள் சுய கௌரவத்திற்கு பங்கம் உண்டாக்கும் வகையில் உங்களை யார் சீண்டினாலும் அதை மறக்கவும் மாட்டீர்கள் மன்னிக்கவும் மாட்டீர்கள். சோம்பலாக இருப்பது உங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது அப்படி இருப்பதுதான் துரதிர்ஷ்டத்திற்கு காரணம் என்று நினைப்பீர்கள். எதிர்காலத்திற்குரிய விஷயங்களையும் பொருட்களையும் சேகரித்து, சேமித்து வைத்துக் கொள்வதில் உங்களுக்கு அதிக அளவில் ஆர்வம் இருக்கும்.

எதையும் அலசி ஆராய்ந்து விமர்சித்து பார்க்கும் ஆற்றல் உங்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் என்றாலும் உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பீர்கள்.

குடும்பம், தொழில் என்று சதா சர்வ நேரமும் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருப்பதால் உங்கள் மூளைக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போகும் எனவே ஓய்வு நேரத்தை நீங்களே திட்டமிட்டு இயற்கை வாசஸ்தலங்களுக்கு சென்று வருவது உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். நீங்கள் செயல்படுவதில் வல்லவர்கள் என்பதால் உங்கள் ஆற்றலை வருவாயாக்கும் வகைகளில் அவசரமின்றியும் தாமதமில்லாமலும் செயல்படுங்கள். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதை விட்டு விட்டு உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்விற்கு நன்மை செய்யக் கூடியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பொதுவாக எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கும், உங்கள் அழகின் மீதும் திறமையின் மீதும் உங்களுக்கு கர்வம் இருக்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பது மட்டுமே உங்கள் நோக்கமும் லட்சியமுமாக இருக்கும். குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளுக்குரியதையாவது அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதை அடைந்தும் விடுவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் வித்யாகாரகன் என்பதுடன் அவர் உங்கள் ராசியில்தான் உச்சமடைகிறார். எனவே, கல்வி அறிவுடன், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பும் உங்களுக்கு இயற்கையாகவே அமைந்துவிடும். உங்கள் யோசனைகளைக் கேட்டு முன்னேறுபவர்கள் நிறைய பேர் உண்டு. அதே நேரத்தில் உறவினர்களுக்கு நீங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்க முடியாது. அந்த உறவினர்கள் உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தாலும் அதையெல்லாம் மறந்து அவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

இவையெல்லாம் கன்னி ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி, போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது: சோதிடவித்தகர் பரணிதரன்