சுறுசுறுப்பும் இருக்கும், படபடப்பும் இருக்கும் | கும்ப ராசிக்காரரின் பொதுப்பலன்கள்
அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், கு, கே, கோ, ஸ, ஸி, ஸூ, ஸே, ஸோ, த… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசி அதிபதி: சனி.
நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு.
யோகாதிபதி: குரு, புதன், சுக்கிரன். மாரகாதிபதி: செவ்வாய், புதன்.
எல்லாம் நம்மால் முடியும், நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்டிட வேண்டும் என்ற சிந்தனையும், ஆன்மிகப் பற்றாளர்போல் தம்மை வெளிகாட்டிக் கொள்பவருமான கும்ப ராசி நேயர்களே!
பொதுவாக நீங்கள் மிகவும் சுறுசுறுப்பும் படப்படப்பும் நிறைந்தவர். எவருக்கும் அடங்கி வாழ்வது என்பது உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும். வேகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்த செயலில் வெற்றி அடைவதற்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் பின்பற்றுவீர்கள். பொதுவாக உங்களுடைய வெற்றிக்குத் தடை என்று சொல்ல வேண்டுமென்றால் அது உங்களுடைய முன்கோபமாகத்தான் இருக்கும். திட்டம் தீட்டுவதில் சாமர்த்திய சாலிகளாக நீங்கள் இருந்தாலும் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் வழியாகத்தான் உங்களால் எந்த ஒன்றிலும் வெற்றிபெற முடியும் என்ற உண்மையை காலம் செல்லச்செல்ல அனுபவத்தின் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
பொதுவாகவே பண விஷயத்தில் நீங்கள் மிகவும் சிக்கனமானவர்கள் என்று கூடச் சொல்லலாம். உங்களின் பீரோவில் எப்போதும் இருப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், வெளியில் பேசும்போதும் பழகும்போதும் உங்களிடம் எதுவும் இல்லை என்பது போலவே பேசிக்கொண்டு நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து விடுவீர்கள்.
எல்லாவற்றையும் தெரிந்தவர்போல் எல்லா இடத்திலும் உங்களை நீங்கள் காட்டிக்கொள்ள நினைப்பீர்கள். அதன் காரணமாகவே சில இடங்களில் வெறுப்பிற்கும் ஆளாவீர்கள். அதே நேரத்தில் சில உண்மைகளை நீங்கள் தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்வீர்கள்.
உங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் உஷார் பேர்வழியாகவே எப்போதும் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் செயல்பாடுகளும் உங்கள் நலன் சார்ந்ததாகவே எப்போதும் இருக்கும்.
உங்கள் எண்ணங்களைச் செயலாக்க என்ன வழி என்று எப்போதும் உங்களுக்குள் நீங்கள் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
குடும்பப் பெருமையாலும் குலப் பெருமையாலும் சிறப்படையும் நீங்கள் உங்கள் உறவுகளிடம்கூட உங்களை உயர்த்திக் காட்டுவதிலேயே குறியாக இருப்பீர்கள். ஒரு செயலை செய்வதற்கு முன்னால் ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? இதனால் நமக்கு என்னப்பலன் என்றே யோசிப்பீர்கள்.
திட்டமிடுவீர்கள். சூழ்ச்சியாலும் சிலவற்றை வெற்றி கொள்வீர்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை நீங்கள் மறக்காதவர்கள். எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை நுணுக்கமாக அறிந்து வைத்து செயல்படுவீர்கள். யாரேனும் ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து விட்டால் அதை முடித்துக் கொடுக்காமல் உங்களுக்கு தூக்கமே வராது. எல்லாவற்றிலும் புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நீங்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட நெருங்கிப் பழகி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
உங்கள் களத்திர ஸ்தானாதிபதியாக விளங்கும் சூரிய பகவான் உங்கள் ராசிநாதனான சனி பகவானுக்கு பகையானவர் என்பதால் பொருத்தம் பார்த்து துணையைத் தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் உங்களுடைய மண வாழ்க்கை இனிக்கும். உங்களில் சிலர் இல்லற விஷயத்தில் எதிர்மறையாக இருப்பீர்கள். பொதுவாக உங்கள் மனம் எப்போதும் தண்ணீர் குடம் போல் தளும்பிக் கொண்டிருக்கும். உங்களில் சிலர் நிறைகுடம்போல் எல்லாம் நிறைந்திருப்பார்கள். சிலர், குறைகுடம் போலவும் இருப்பீர்கள். உங்களில் பெரும்பாலோர் சஞ்சல புத்திக் காரர்களாகவோ, வக்கிரமான ஆசைகள் கொண்டவர்களாகவோ, எண்ணுவதையெல்லாம் அனுபவித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவே இருப்பதுடன் எதையாவது நினைத்து எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். பல சமயங்களில் உங்களின் தேவைகளையும் உங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது, உங்களை நம்பியுள்ளவர்களின் தேவைகளையும் உங்களால் நிறைவேற்றிட முடியாது. அதற்குரிய முயற்சிக்கும் உத்தேசம் இல்லாதவர்களாகவோ, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களாகவோ நீங்கள் இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு பரம்பரை சொத்துக்கள் இருப்பதும் பிள்ளைகள் அதிகம் பிறப்பதும் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும்.
உங்களுக்கு உள்மன வலிமை அதிகம் உண்டென்றே சொல்லவேண்டும். எல்லா நேரத்திலும் எல்லா நிலையிலும் எந்தவித முயற்சியும் இல்லாமல் உங்களுக்குரிய அடிப்படை ஆதாரத்தை அடையக்கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கையும் தணியாத வேட்கையும் எப்போதும் இருக்கும். முடிந்தவரையில் உங்களுக்குத் தேவையானவற்றை நாடகமாடியாவது, அல்லது கோபம் கொள்வதுபோலவோ வெளிக்காட்டி உங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் எளிதாக அடைந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு இக்கட்டாக இருந்தாலும் எதற்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் உணர்ச்சிவயப் போக்கினால் உங்களுக்கு நரம்புத்தளர்ச்சியோ, இரத்தக்கொதிப்போ உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்களுக்கும் நன்மையாகும்.
நீங்கள் சகோதரர்களுடன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பெரிதும் விரும்புவீர்கள் என்றாலும் ஒரு சிலருக்கு அந்த விருப்பம் நிறைவேறாமலேயே போய் வாழ்க்கை வேறு கோணத்தில் போக ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் நீங்கள் கஷ்டப்பட்டே வாழ்க்கையில் உயர்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் இறுதியில் பல சங்கடங்களை நீங்கள் அனுபவித்திடக் கூடியவர்களாக இருப்பீர்கள். உங்களின் உடலும் உள்ளமும் அடிக்கடி சோர்ந்து போகும். வருமானம் தேடி வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லக் கூடிய யோகம் உங்களில் பலருக்கு உண்டாகும். உங்களில் பலருக்கு தொழிற்கூடங்கள், நீதித்துறை, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அன்னியர் மூலமாகவே வருமானம், ஆதாயம் என்று சொல்ல வேண்டும். சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடித்து நேர்மையாகவே வாழ நீங்கள் முயற்சித்தாலும் சில நேரங்களில் தடம்புரண்டு விடுவீர்கள். உல்லாச வாழ்க்கையை விரும்பும் நீங்கள் எதிர் பாலினத்தினரை உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பயன்படுத்திக் கொள்பவராக இருப்பீர்கள். அடுத்தவரின் எண்ணத்தையோ உணர்ச்சிகளையோ நீங்கள் புரிந்து கொள்ளாதவர் என்பதால் உங்களுடன் இருப்பவர் தூண்டிலில் சிக்கிய புழுபோல் துடிப்பார்கள்.
உங்களில் சிலர் தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டவராகவும், எந்த ஒன்றையும் சரிவர நடத்த முடியாதவராகவும் இருப்பீர்கள். இளமைக்காலத்தில் உங்கள் விருப்பப்படி வாழ்ந்து உங்கள் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவராக இருப்பதால் உங்கள் திருமணம் தள்ளிக்கொண்டே போகும். உங்கள் குணத்தாலும் செயலாலும் பொருள் நஷ்டமும் உங்களுக்கு ஏற்படும், அசையா சொத்துக்களை உங்களால் அடைய முடியாமல் போய்விடும். உங்கள் சுய வருமானம் உங்கள் குடும்பம் என்றானதற்குப் பின் மனைவியின் நிர்ப்பந்தத்தால் உங்கள் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.
பொதுவாக நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வீர்கள் அந்த உற்சாகம் மிதமிஞ்சி போய்விடக் கூடாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் எந்த ஒரு செயலிலும் அவசரமில்லாமல் நிதானத்துடனும் சகிப்புத்தன்மையும் செயல்படுவதால் உங்களுக்கு அதில் வெற்றி உண்டாகும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மலருக்கு மலர்தாவும் எண்ணமும் அதற்குரிய வாய்ப்பும் உங்களுக்கு உண்டாகும், அதனால் உங்கள் கடமைகளைக்கூட நீங்கள் மறந்து விடுவீர்கள். இத்தகைய உங்கள் குணத்தினாலும் செயல்பாடுகளினாலும் ஒருவர்கூட உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவராக இருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வெளியுலகில் நீங்கள் எத்தகையவராக இருந்தாலும் வீட்டிற்குள் நீங்கள் பந்த பாசங்களினால் வெறுத்திடக் கூடியவராகவே இருப்பீர்கள்.
இவையெல்லாம் கும்ப ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.
எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.
எழுதுவது – சோதிடவித்தகர் பரணிதரன்