ஆபிரிக்கக் கோப்பைக்கான முதலாவது காலிறுதி மோதலில் 2-0 வித்தியாசத்தில் வென்ற கமரூன்.
தனது நாட்டிலேயே நடத்தப்படும் உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கைக் கோப்பைப் போட்டிகளில் கமரூனின் வெற்றிஉதைகள் தொடர்கிறது. கார்ல் டோக்கோ – எக்காம்பி கமரூன் சார்பாக இரண்டு தடவைகள் காம்பியாவின் வலைக்குள் பந்தை உதைத்து அவ்வெற்றியின் நாயகனாகப் போற்றப்படுகிறார்.
ஆபிரிக்கக் கோப்பையை அதன் சரித்திரத்தில் ஐந்து தடவைகள் ஏற்கனவே வென்றிருக்கும் நாடு கமரூன். அதே நாட்டில் மோதல்கள் நடப்பதால் நாட்டு மக்கள் தமது குழுவுக்காகக் கொடுக்கும் உற்சாகமும் பலமானது. ஆரம்பத்திலிருந்தே தனது ஒவ்வொரு மோதலிலும் பெரும் திறமையைக் காட்டி வெற்றிகளைக் குவித்த கமரூன் குழுவினரின் தன்னம்பிக்கை காம்பியாவுடன் விளையாடிய போது பிரகாசித்ததைக் காண முடிந்தது.
பலமான அணிகளைச் சாய்த்து வெற்றிபெற்ற காம்பியா அதுவரை வெற்றிகளையே சந்தித்துவந்த கமரூனை வீழ்த்தக்கூடுமென்ற ஒரு சாராரின் எதிர்பார்ப்பு வீணாகியது. மோதலின் ஆரம்பத்திலிருந்தே கமரூன் அணியின் பாதுகாப்பையும், விளையாட்டு நுட்பத்தையும் காம்பியாவால் அணுகவே முடியவில்லை.
மோதலின் 50, 57 வது நிமிடங்களில் கம்பியாவின் வலைக்காப்பாளரை வீழ்த்தி வெற்றியைத் தனது நாட்டுக்காகப் பெற்றுக் கொடுத்தார் கார்ல் டோக்கோ – எக்காம்பி.
சாள்ஸ் ஜெ. போமன்