டொங்கா தீவுகளருகில் எரிமலை வெடிப்பின் சுனாமி அலைகள் 10,000 கி.மீ தூரத்தில் அழிவை உண்டாக்கியிருக்கின்றன.

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் டொங்கா தீவுகளையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவால் தென்னமெரிக்க நாடான பெருவின் 140 கி.மீ கடற்கரை பெருமளவில் எண்ணெய்க் கழிவால் அழுக்காகியிருக்கிறது. சுமார் 12,000 பீப்பாய் எண்ணெய் கடலில் சிந்தியதால் அப்பிராந்தியத்தின் மீன்கள், கடற்பறவைகள் பெருமளவில் அழிந்திருக்கின்றன.

பெரு தமது எல்லையில் ஏற்பட்ட அழிவைப் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தாலும் அதன் அளவு முன்னர் கணிக்கப்பட்டதை விட இரண்டு மடங்காகும் என்று தெரிவிக்கிறது. அக்கடற்கரையில் எண்ணெயை ஏற்றித் தயாராக இருந்த ஸ்பானிய நிறுவனத்தின் ரப்சூல் நிறுவனத்தின் கப்பலொன்று சுனாமி அலையால் தாக்கப்பட்டதாலேயே அந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.

பெருவின் தலைநகரையடுத்து 20 கி.மீ தூரத்திலிருக்கும் அந்தக் கடற்கரையில் ரப்சூல் நிறுவனத்தின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு மையம் இருக்கிறது. பெரு அரசு அந்த நிறுவனத்தின் நாலு நிர்வாகிகளுக்குப் பயணத்தடையும் விதித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. அந்த நிறுவனம் எண்ணெய்க் கசிதலைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்று அரச வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகிறார். ரப்சூல் நிறுவனமோ சுனாமி அலைகளின் தாக்குதல் பற்றிப் பெரு அரசு தகுந்த சமயத்தில் எச்சரிக்கவில்லை என்று திருப்பித் தாக்குகிறது.

ரப்சூல் நிறுவன நிர்வாகிகளை தண்டிக்கப்பட்டால் 4- 6 வருடச் சிறைத்தண்டனை அவர்களுக்குக் கிடைக்கலாம். அந்த நிறுவனத்திடம் சுமார் 34 மில்லியன் டொலரை பெரு அரசு நட்ட ஈடாகக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்