தலிபான்களை விமர்சித்த பெண் பத்திரிகையாளர் அவர்களிடமே உதவியை நாடவேண்டியதாயிற்று.
“கலியாணமாகாத, கர்ப்பிணிப் பெண்ணொருத்திக்குத் தலிபான்கள் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் அவளுடைய நிலைமை படு சிக்கலாகியிருக்கிறது என்பதுதான்,” என்று எழுதும் சார்லொட் பெல்லிஸ் நியூசிலாந்தைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க + நேசநாட்டு இராணுவத்தினர் வெளியேறுவதைக் கண்காணித்து எழுத ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கே மாட்டிக்கொண்டிருக்கிறார்.
ஐந்து மில்லியன் மக்களிடையே வெறும் 52 கொரோனா இறப்புகள், என்பதைச் சாதனையாக நினைக்கிறதோ என்னவோ நியூசிலாந்து அரசு தமது நாட்டுக்குத் திரும்பிவரும் குடிமக்களும் கடுமையான தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்துகிறது. நாடு திரும்பும் குடிமக்கள் கட்டாயமாக நாட்டின் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் தங்குமிடங்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
குறிப்பிட்ட தனிமைப்படுத்தல்களுக்குத் தங்களை உட்படுத்த விரும்பாத வெளிநாடுகளில் மாட்டிக்கொண்ட நியூசிலாந்தினர் பதிலாக வேறேதாவது நாடுகளில் தற்காலிகமாகத் தங்குவதற்கே முதலில் வழி தேடிவருகிறார்கள். அப்படியான கதைகள் பல ‘கொரோனாக் காலத்தில் நாட்டு மக்களைக் காப்பாற்றியவர்’ என்று புகழப்படும் பிரதமர் ஜசிந்தா அர்டெனுக்கு விமர்சனக் கோர்வையாகியிருக்கின்றன.
தனது இணையால் கர்ப்பிணியான பெல்லீஸ் ஒரு வழியாக கத்தாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். கல்யாணம் செய்யாமல் பிள்ளைபெற்றுக்கொள்ளுதல் கத்தாரில் தண்டனைக்குரிய குற்றமென்று அறிந்ததால் அவர் அல் ஜசீரா ஊடகத்தில் தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு தனது காதலருடன் பெல்ஜியத்துக்குச் சென்றிருக்கிறார். பெல்ஜியக் குடியுரிமை இல்லாத அவருக்கு நியூசிலாந்தைத் தவிர ஆப்கானிஸ்தானில் தங்க மட்டுமே அனுமதியிருக்கிறது.
மே மாதத்தில் பிள்ளை பெறவிருக்கும் பெல்லிஸ் எப்படியாவது தனது நாட்டுக்குத் திரும்ப எண்ணிப் பல தடவைகள் நியூசிலாந்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். அதற்காக 53 ஆவணங்களை ஆப்கானிஸ்தானிலிருக்கும் நியூசிலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பியும் தான் சொந்த நாட்டுக்குத் திரும்புதல் நிராகரிக்கப்பட்டதாக பெல்லீஸ் எழுதியிருக்கிறார்.
தனது நிலைமையை தன்னிடம் தொடர்பிலிருக்கும் தலிபான் அதிகாரிகளிடம் விளக்கியதில் அவர்கள் பெல்லிஸ் ஆப்கானிஸ்தானுக்கு வந்து பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். “நீங்கள் திருமணம் செய்துகொண்டதாக மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஏதாவது பிரச்சினை உண்டாகினால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்,” என்று தலிபான் அதிகாரிகள் தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால், ஆப்கானிஸ்தானின் மருத்துவ சேவை மிகவும் மோசமாகியிருப்பதால் அங்கே பிள்ளைப்பேறு செய்துகொள்ளுதல் தனது மரணமாகவும் முடியலாம் என்கிறார் பெல்லிஸ்.
நியூசிலாந்தின் தனிமைப்படுத்தல் தங்குமிடங்களின் உயர் நிர்வாகி கிரிஸ் பன்னி, பெல்லிஸ் இதுவரை கொடுத்திருக்கும் விண்ணப்பங்களின்படி அவர் அவசரமாக நாட்டுக்குத் திரும்பவேண்டியவர்கள் என்று கருதப்படமாட்டார் என்று குறிப்பிடுகிறார். பெல்லிஸிடம் மேலும் ஆவணங்களும், விண்ணப்பமும் கேட்கப்பட்டிருப்பதாகவும் அவரை எந்த விதமான கோரிக்கை தரவேண்டுமென்று விளக்கியிருப்பதாகவும் அந்த உயர் நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்