ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான மின்கலங்கள் தயாரிக்கும் சுமார் 40 தொழிற்சாலைகள் உருவாகின்றன.

புதிய தொழில் நுட்பங்களாலான பொருட்கள் பலவற்றுக்கும், அல்லது அவைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களுக்கும் ஆசிய நாடுகளை, முக்கியமாகச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலைமையை மாற்ற ஐரோப்பா முடிவெடுத்துச் செயற்பட்டு வருகிறது. அவைகளிலொன்றாக வாகனங்களுக்கான மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஐரோப்பிய நாடுகளிலேயே நிறுவ ஐரோப்பிய ஒன்றியம் நிதியை ஒதுக்கியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான மின்கலத் தொழிற்சாலை ஒன்றைக்கூடக் கட்டும் திட்டம் இருக்கவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் உலகின் வாகனத் தயாரிப்பாளர்கள் அனைவருமே வரும் 5 – 15 வருடங்களுக்குள் தமது வாகனங்களெல்லாம் மின்கலப் பாவனைக்கு மட்டுமே ஏற்றதாகத் தயாரிக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். 

அத்துடன், கொரோனாத்தொற்றுப் பரவல்காலத்தினால் ஏற்பட்ட உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடுகளால் உலகமெங்கும் தொழிற்சாலைகளில் தயாரிப்புக்கள் ஸ்தம்பித்தன. அதையும் கணிப்பில் கொண்டு ஐரோப்பா தனக்கான அவசியத் தயாரிப்புக்களுக்குத் தனது பிராந்தியத்திலேயே தன்னிறைவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டது. அதனால், சுமார் 40 பாரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகளை ஐரோப்பிய நாடுகளில் கட்டும் திட்டங்கள் துரித வேகமாக நடந்து வருகின்றன. ஓரிரண்டு ஏற்கனவே தயாரிப்பிலும் இறங்கிவிட்டன.

இப்போது வாகன மின்கலத் தயாரிப்பில் முன்னணியில் இருப்பது சீனாவாகும். ஐரோப்பாவுக்கு வெளியே தான் 95 விகிதமான மின்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனா அவ்விடயத்தில் ஐரோப்பாவைச் சுமார் 10 வருடங்கள் பின்னே தள்ளிவிட்டதாக ஐரோப்பிய வாகனத் தயாரிப்பாளர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.

வாகனங்கள் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம், கைப்பேசிகள் உலகுக்கு அறிமுகப்படுத்த காலம் போன்றவையுடன் இந்த மின்கலத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் கட்டப்படும் காலத்தை ஒப்பிடலாம் என்று பொருளியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஒவ்வொரு தொழிற்சாலையும் நேரடியாகச் சுமார் 3,000 பேரை வேலைக்கு அமர்த்தும் என்றும் கணிக்கப்படுகிறது. அவற்றைத் தவிர அத்தொழிற்சாலைகள் கட்டப்படும் நகரங்களில் அவற்றுடன் தொடர்புள்ள மேலும் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உண்டாக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்