சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் மத்திய திணைக்களமான EMA விடம் ரஷ்யா, சீனா நாடுகளின் நிறுவனங்களும் தத்தம் தடுப்பு மருந்துகளின் முழு ஆராய்ச்சி விபரங்களையும் அனுப்பி வைக்குமானால் அவைகளை ஆராய்ந்த பின்னர் ஒன்றியத்துக்குள் விநியோக்கலாம் என்ற நிலைப்பாடு எழுந்திருக்கிறது.

நீண்ட காலமாகவே சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொவிட் 19 கான தடுப்பு மருந்துகளைத் தயாரித்திருந்தாலும் அவைகளை நம்புவதற்கு உலகின் பல நாடுகளிடையே இருந்த அவநம்பிக்கை குறைந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் விஞ்ஞான சஞ்சிகையொன்றில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தானது 91 விகிதம் கொவிட் 19 க்குப் பாதுகாப்பளிகிறது என்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்தபின்னரே இந்த நோக்கு உண்டாகியிருக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலைவர்கள் இதைத் தெரிவித்திருக்கிறார்கள்.

ரஷ்யாவைப் பொறுத்தவரை அந்த மருந்தின் தயாரிப்பு எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்கவில்லை. எனவே தமது நாட்டுக்குள்ளேயே அவர்களால் தடுப்பு மருந்துகளை வேகமாக விநியோகிக்க இயலவில்லை. அது பற்றிப் புத்தினிடம் ஜேர்மனியத் தலைவர் மெர்க்கல் பேசி ஜேர்மனியில் தயாரிக்க அனுமதி கேட்டதாகத் தெரிகிறது. அதே சமயம், ரஷ்யா தாம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தற்போதைய நிலையில் தடுப்பு மருந்துகளை விற்கும் அனுமதிக்காக முயற்சிக்கத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் ஹங்கேரி, செர்பியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே ரஷ்யாவின் தடுப்பு மருந்துகளைத் தத்தம் நாடுகளுக்குள் விநியோக்கிக்கும் முடிவுகளை எடுத்து ஹங்கேரி 5,000 தடுப்பு மருந்துகளைப் பெற்றிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *