உக்ரேனில் போர் மூளலாம் என்ற பயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பணியத் தயாராகியது போலந்து.
நீண்ட காலமாகப் போலந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் போலந்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளினால் போலந்து பல வழிகளிலும் தண்டிக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவுகளைப் பொருளாதார வீழ்ச்சியில் உணர ஆரம்பித்திருக்கும் போலந்து, தனது எல்லை நாடான உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்தால் தமக்கு உதவி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேவைப்படுமென்று உணர்ந்து ஒன்றியம் கோரிவரும் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
போலந்தின் ஜனாதிபதி ஆந்திரேய் டூடா தனது நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் கோரிவரும் மாற்றங்கள் சிலவற்றைச் செய்வது பற்றிப் பேச்சுவார்த்தை நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லாயொனைச் சந்தித்திருக்கிறார். ஆனால், ஐ.ஒன்றியத்தின் பக்கத்திலிருந்து எதுவித உத்தரவாதங்களும் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை.
போலந்தில் ஆட்சியைக் கைப்பற்றிய டூடாவின் கட்சி நாட்டின் ஊடகங்கள், நீதிமன்றங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சட்டங்கள் பலவற்றைச் சமீப வருடங்களில் கொண்டுவந்திருக்கிறது. எக்காரணத்துக்காகவும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படாது, ஐரோப்பாவுக்குள் வரும் அகதிகளை ஏற்கமாட்டோம் போன்ற நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கிறது. அவர்களின் போக்கைப் பல தடவைகள் கண்டித்தும் எந்தவித மாற்றமும் ஏற்படாததால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பல பில்லியன் எவ்ரோ பெறுமதியான மான்யங்களை நிறுத்திவைத்திருக்கிறது.
தற்போது தனது எல்லையில் போர் ஏற்பட்டால் உக்ரேன் வழியாக பல மில்லியன் அகதிகள் நாட்டுக்குள் வரலாம், இராணுவ உதவி ஐரோப்பாவிடம் பெறவேண்டிய நிலை ஏற்படும் போன்ற பயங்களால் போலந்து தனது போக்கில் சில மாற்றங்களைக் கொண்டுவரத் தயார் என்று ஜனாதிபதி டூடா தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்