அமெரிக்க -ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போர் படிப்படியாகக் நிறுத்தப்படுகிறது.

ஐரோப்பிய  ஒன்றிய நாடுகள் வர்த்தகத்தில் அமெரிக்காவை ஏய்ப்பதாகக் குற்றஞ்சாட்டி 2018 இல் ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புப் பொருட்கள் மீது இறக்குமதி வரி விதித்தார். பதிலுக்குப் படிப்படியாக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கவே இரண்டு பகுதியாருக்குமிடையே வர்த்தகப் போர் ஆரம்பித்தது.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று உறுதி கூறியிருந்தார். 

புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்த விபரங்களின்படி அமெரிக்காவுக்கு 3.3 மில்லியன் தொன் இரும்பு, அலுமினியப் பொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் வரிகளின்றி ஏற்றுமதி செய்யும் என்று தெரியவருகிறது. பதிலுக்கு அமெரிக்காவின் மோட்டார் சைக்கிள்கள், விஸ்கி போன்றவைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தண்டனை வரிகள் நீக்கப்படும். 

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியப் பொருட்கள் முழுவதுமாக ஒன்றியத்தினுள் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் வரையறையாகும். இரு தரப்பாருக்குமிடையே ஏற்பட்டிருந்த வர்த்தகப் போரால் அமெரிக்காவில் அப்பொருட்களின் விலை கடந்த வருடங்களில் இரட்டிப்பாகியிருப்பதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா ரைமொண்டோ குறிப்பிட்டார்.

அமெரிக்க விஸ்கிகளுக்கான வரி நீக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க மது காய்ச்சும் நிறுவனங்களின் ஏகோபித்த ஆதரவைக் கொடுத்திருக்கிறது. அது அமெரிக்க விவசாயிகளை மட்டுமன்றி இரண்டு பக்க உணவக வர்த்தகத்துக்கும் ஊட்டமாக அமையுமென்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்