பருவநிலை மாநாட்டு வேளை, குழப்பியடிக்கிறது காலநிலை!

புயல் மழையால் மரங்கள் முறிவுலண்டன்-கிளாஸ்கோ ரயில்கள்தடை! பிரதிநிதிகள் அந்தரிப்பு!!

லண்டன் மத்திய Euston ரயில் நிலையத்துக்கும் கிளாஸ்கோ நகருக்கும் இடையிலான ரயில் சேவைகள் மோசமான காலநிலை காரணமாகத் தடைப்பட்டுள்ளன.அதனால் பருவநிலை மாநாட்டுக்காகக் கிளாஸ்கோ செல்ல வந்த வெளி நாட்டு உள் நாட்டுப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்படப் பல நூற்றுக்கணக்கான பயணிகள் அங்கு முடங்கி நிற்கின்றனர்.

லண்டனில் இருந்து தென்மேற்கு ரயில் மார்க்கத்தில் செல்லும் (South Western railway) சகல ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.புயல் மழையால் முறிந்த மரங்கள் ரயில் பாதை மேல் இணைப்புக் கம்பிகளை(overhead wires) சேதப்படுத்தியுள்ளதால் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று Euston ரயில் நிலைய நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்நிலையத்துக்குள் முடங்கி நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. மாநாட்டு நகருக்குச் செல்ல வந்த சூழல் செயற்பாட்டாளர்கள் பலரும்சுலோக அட்டைகளோடு ரயில் நிலையத்தினுள் குந்தியிருக்கின்றனர். சுற்றுச் சூழலியல் அறிவியலாளர்கள் சிலரும் ரயில்களில் சிக்குண்டுள்ளனர் என்பதைஅவர்களது சமூகவலைத்தளப் பதிவுகள்வாயிலாக அறிய முடிகிறது.

விமானங்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசு படுத்துவதால் அவற்றைத் தவிர்த்து ரயில்களில் பயணம் செய்ய வந்த பிரதிநிதிகள் மற்றும் சூழலியலாளர்களே காலநிலை காரணமாகப் பயணத் தடையில் சிக்கியுள்ளனர்.அவர்களில் பலரும் உள்ளூர் விமான சேவைகளைப் பதிவுசெய்து கிளாஸ்கோ செல்ல முயற்சிக்கின்றனர் என்ற தகவலை ரயில் நிலையத்தில் சிக்குண்டுள்ள ரோய்ட்டர் செய்தியாளர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.

கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாடு ஆரம்பமானதை ஒட்டி உலக வானிலை அமைப்பு(World Meteorological Organisation)விடுத்துள்ள அறிக்கையில், மழை, வெள்ளம்,புயல்கள், காட்டுத்தீ, வெப்ப அனல் போன்ற தீவிரமான பருவநிலைச் சம்பவங்கள் இனிமேல் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கும் – என்று தெரிவித்திருக்கிறது.

புவியின் வெப்ப நிலையை 2100 ஆம் ஆண்டு 1.5 C ஆக வரையறுப்பதை இலக்காகக் கொண்டு-அதற்காக உலகளாவியரீதியில் ஒன்றிணைந்து எடுக்கவேண்டியதிட்டங்களை விவாதிப்பதற்காக-சுமார்200 நாடுகளது தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 25 ஆயிரம் பேர் கிளாஸ்கோநகரில் கூடியுள்ளனர்.

காபன் வெளியேற்றத்தை மட்டுப்படுத்த 2030 முதல் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றோம் என்பதைவிளக்கும் திட்ட முன்மொழிவுகளை நாடுகளது தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் வெளியிடவுள்ளனர்.

பாரிய பருவநிலைப் பேரனர்த்தத்தைத்தவிர்ப்பதற்கான “கடைசிச் சந்தர்ப்பம்”என்று இந்த மாநாட்டைப் பலரும் குறிப்பிடுகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.