தலிபான்களின் அதியுயர் தலைவர் முதல் தடவையாகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களின் ஆன்மீகத் தலைவர் என்று ஹைபதுல்லா அகுண்ட்சாடா குறிப்பிடப்படுகிறார். ஆகஸ்ட் நடுப்பகுதியில் தலிபான்கள் தமது ஆட்சியை நிறுவிய பின்னரும் அகுண்ட்சாடா இதுவரை பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்ததால் அவர் பற்றிய பல சந்தேகங்களும் எழுந்திருந்தன.

அகுண்ட்சாடா அரிதாகவே பொதுவெளியில் தலைகாட்டியிருக்கிறார். ஆனாலும், அவ்வியக்கத்தினரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கான இறுதிச் சொல் அவரிடமிருந்தே வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கந்தகாரிலிருக்கும் இஸ்லாமிய மதராஸா ஒன்றுக்கு அவர் விஜயம் செய்து தனது இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். அங்கே சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்றி அவர் வெளியிட்ட செய்தி தலிபான் இயக்கத்தினரால் சமூகவலைத் தளங்களை உலவவிடப்பட்டிருக்கிறது.

“நான் இங்கே தோன்றியதற்குக் காரணம் உங்களுக்காகக் கடவுளை வேண்டிக்கொள்வதற்கும், நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவுமாகும்,” என்று அகுண்ட்சாடா குறிப்பிட்டிருக்கிறார்.

அக்தார் மன்சூர் என்ற தலிபான்களின் ஆன்மீகத் தலைவர் 2016 இல் அமெரிக்கக் காற்றாடி விமானக் குண்டொன்றால் கொல்லப்பட்ட பின்பு “விசுவாசிகளின் தளபதி” என்று அகுண்ட்சாடா தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது வாழ்வு, இருப்பிடம் ஆகியவை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.

1990 களில் ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் ஆண்டபோது இஸ்லாமியச் ஷரியா நீதிமன்றங்களின் அதியுயர் தலைவராக அகுண்ட்சாடா இருந்தார். இதற்கு முன்னர் செப்டம்பர் 07 ம் திகதியன்று அவர் தலிபான்கள் ஷரியாச் சட்டங்களுக்குட்பட வாழவேண்டுமென்று கோரியிருந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்