கர்நாடகாவின் ஹிஜாப் சர்ச்சை பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா?
இந்தியாவின் கர்நாடகா மாநில கல்லூரியொன்றில் ஆரம்பித்து மாநிலமெங்கும் பரவிய “கல்விக்கூடங்கள் சமய அடையாளங்களை அணிவோரை வகுப்புக்குள் விடலாமா?” என்ற கேள்வியின் விளைவுகள் அந்த மாநிலத்தில் உயர்கல்வி நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூட வைத்திருக்கிறது. அதுபற்றி விசாரித்த கர்நாடகத்தின் ஒற்றை நீதிபதி உயர் நீதிமன்றம் விசாரணையை ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளாலான நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட கர்நாடகாவின் உயர் நீதிமன்றம் வியாழனன்று அதை விசாரிக்க இருக்கிறது. அதே சமயம், அந்தக் கேள்வியை அடுத்து உண்டாகியிருக்கும் வன்முறைகள், அரசியல் சர்ச்சைகள் நாடெங்கும் பரவி மோசமான விளைவுகளை உண்டாக்க முதல் இந்திய உச்ச நீதிமன்றம் அதை விசாரிக்கக் கோரியிருக்கிறார் வழக்கறிஞர் கபில் சிபல்.
குண்டபுரா நகரிலிருக்கும் கல்லூரியே தமது மாணவிகள் ஹிஜாபை அகற்றிவிட்டே வகுப்புக்களில் பங்குபற்றவேண்டும் என்ற முடிவை முதலில் எடுத்தார்கள். அது அங்கே பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு இடையிலான சர்ச்சைகளை உண்டாக்கியது. அதையடுத்து ஹிஜாப் அணிந்து வருவோரை வகுப்புக்குள் விட்டால் தாம் காவிச் சாலைவைகளை அணிந்து வருவதாகச் சொல்லி அதைச் செய்ய ஆரம்பித்தார்கள் சில இந்து மாணவர்கள்.
முதலில் ஒரு நகரில் ஆரம்பித்த அது ஒரு அரசியல், மத போராட்டமாகி வேகமாகக் கர்நாடகா மாநிலமெங்கும் பரவிவிட்டது. அதே சமயம் இந்திய அரசியல்வாதிகளும் அவ்விடயத்தில் வெவ்வேறு கருத்துக்களை உதிர்க்கவே விடயம் பூதாகரமாகக் கைகலப்புக்கள் உண்டாகவும் காரணமாகியது. சில மாணவிகளும், பெற்றோரும், வேறு சிலரும் நீதி கோரி மாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்கள்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் விசாரிக்கும் விடயத்தைத் தாம் விசாரிக்க ஆரம்பிக்கலாகாது என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா வழக்கறிஞர் கபில் சிபலின் வேண்டுகோளை மறுத்திருக்கிறார். ஆயினும், நாட்டின் பல பாகங்களிலும் அச்சர்ச்சையின் விளைவுகள் பரவ முதல் உச்ச நீதிமன்றமே விசாரிக்கவேண்டும் என்று கபில் சிபல் கோரவே “பார்க்கலாம்,” என்று நீதிபதி என்.வி.ரமணா பதிலளித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்